Published : 09 Jul 2014 12:38 PM
Last Updated : 09 Jul 2014 12:38 PM
சென்னையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள இ-சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்தி பொதுமக்கள் பயனடையலாம் என மின்சாரத் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்: "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்த பல ‘மாற்று முறை மின் கட்டண சேவைகளை’ நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த வசதிகளின் மூலம், மின் நுகர்வோர்கள் வங்கி பற்று அட்டை (debit card) அல்லது கடன் அட்டை (credit card) மூலமாகவோ, இணையதள வங்கி சேவை மூலமாகவோ, 24 மணி நேர தானியங்கி இயந்திரம் மூலமாகவோ, வங்கி முகப்புகள், தபால் நிலையங்கள், கைபேசி வங்கி மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவோ, மின் கட்டணம் செலுத்தும் வசதி நடைமுறையில் உள்ளது.
மேலும், தமிழக முதல்வர் அண்மையில் சென்னையில் துவக்கி வைக்கப்பட்ட அரசு பொது இ-சேவை மையங்களில் (மயிலாப்பூர் தாலுகா அலுவலகம், எழும்பூர் தாலுகா அலுவலகம், மாம்பலம் தாலுகா அலுவலகம், சைதாப்பேட்டை பிரிவு குடிநீர் வாரிய அலுவலகம், அசோக் நகர் பிரிவு குடிநீர் வாரிய அலுவலகம், அடையாறு மாநகராட்சி அலுவலகம், ராயபுரம் மாநகராட்சி அலுவலகம், ஷெனாய் நகர் மாநகராட்சி அலுவலகம், புதுப்பேட்டை நகர்ப்புற கடன் சங்கம் மற்றும் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் - சோழிங்கநல்லூர், ஐயப்பந்தாங்கல், நாவலூர், கோவூர், கோலப்பாக்கம்) பொது மக்களுக்காக அரசுத்துறை சார்ந்த பல்வேறு சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக மின் கட்டணம் செலுத்தும் வசதியும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பொது இ-சேவை மையங்களில் மின் நுகர்வோர்கள் தங்கள் மின் கட்டணத்தை பணம் அல்லது காசோலை அல்லது கேட்பு வரைவோலை மூலமாக செலுத்தலாம். திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 9:30 முதல் மாலை 6:00 மணி வரை இந்த பொது இ-சேவை மையங்கள் செயல்படும். மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்தத் தங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு பொது இ-சேவை மையங்களையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்". இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT