Published : 10 Dec 2017 07:22 PM
Last Updated : 10 Dec 2017 07:22 PM
கர்நாடக மாநிலம் நந்திதுர்கா மலையில் உருவெடுக்கும் தென்பெண்ணை ஆறு பல நூறு கிலோமீட்டர் உருண்டோடி விழுப்புரம் மாவட்டம் வழியாக கடலூரில் வங்கக் கடலில் கலக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பருவமழையில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது விழுப்புரம் மாவட்டத்தில் 6 மாதங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது விவசாயம் செழிப்புடன் இருந்தது.
ஆனால் கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பருவமழையில் 20 ஆயிரம் கனஅடி வரை ஆற்றில் தண்ணீர் சென்ற நிலையில், மழை நின்று ஒரே மாதத்தில் ஆற்றில் தண்ணீர் முற்றிலும் வற்றி, வறண்டுவிட்டது.
ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் சேதம் அடைந்ததாலும், அளவுக்கு அதிகமாக மணல் கொள்ளையடிக்கப்பட்டதாலும், துணை ஆறுகளுக்கு தண்ணீர் செல்லாததால் ஆற்று நீர் பாசனத்தை நம்பிய விவசாயிகள் விவசாயம் செய்ய இயலாமல் போனது.
கோரிக்கை வைத்தும்
பயனில்லை
தடுப்பணைகளை சரிசெய்தும், புதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் பணிகள் நடக்கவில்லை .
இதனால் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் தளவானூர் கிராமத்தைச் சேர்ந்த தணிகைவேல் என்ற விவசாயி தன் சொந்த செலவில் தென்பெண்ணையாற்றில் இருந்து பிரியும் மலட்டாறில் தடுப்பணை கட்டி அந்த ஆற்றில் தண்ணீர் செல்ல வழிவகுத்துள்ளார் இதை கடந்தாண்டு ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் செய்தியாக வெளியிட்டது.
இந்த அணை சேதமானதால் நடப்பாண்டு நரிப்பாளையம், திருபாச்சனூர், குச்சிப்பாளையம், பில்லூர், அரசமங்கலம், சேர்ந்தனூர் உள்ளிட்ட கிராம மக்கள் தளவானூர் கிராமத்தினருடன் இணைந்து தடுப்பணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
150 கிராமங்கள் பயன் பெறும்
இதுதொடர்பாக கிராம மக்கள் சார்பாக தடுப்பணை அமைக்கும் பணிகளை நிர்வகிக்கும் தணிகைவேல் கூறியதாவது: தளவானூர் கிராமத்தில் பிரிந்து உருவாகும் மலட்டாறை குடிநீர் மற்றும் பாசனத்திற்காக நம்பி 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இதன் குறுக்கே தடுப்பணை அமைத்தால் நிலத்தடி நீர்வளம் செறிவூட்டப்படும் என்ற நோக்கத்தில் அரசிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் அரசு அதிகாரிகள் செவி மடுக்கவில்லை. கடந்தாண்டு நான் பணியல் இறங்கினேன். தனிநபரான என்னால் பணிகளை நிறைவு செய்ய இயலவில்லை.
தற்போது தடுப்பணை அமைக்கும் பணியில் கிராம மக்களும் கை கோர்த்துள்ளனர். இதுவரை சுமார் ரூ.10 லட்சம் விவசாயிகளிடம் வசூலித்துள்ளோம். அருகில் உள்ள விவசாய நிலங்களிலிருந்து பனை, தென்னை, பாமாயில், வேப்பமரங்கள் வேறோடு பிடுங்கப்பட்டு கரைகளில் வைத்து கட்டுகிறோம். இதன் மூலம் மணல் அரிப்பை தடுக்க முடியும் என்று கூறினார்.
“தற்போது 720 மீட்டர் நீளத்திற்கு, 8 அடி உயரத்திற்கு தடுப்பணை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மலட்டாறு விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இல்லாமல் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலம் வரையிலும் பாய்கிறது. இதன் மூலம் சுமார் 1.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது‘‘ என்றும் அவர் தெரிவித்தார். இப்பணிகளை தொடங்கிய தணிகைவேல் மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக ராம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராகவன் என்ற விவசாயி கூறியதாவது: கடந்தாண்டு தணிகைவேல் கட்டிய தடுப்பணைக்கு பொதுப்பணித்துறையினர் தாங்கள் செலவு செய்ததாக கணக்கு காட்டியுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.
பொதுப் பணித்துறை விளக்கம்
இதுதொடர்பாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, “தற்போது கிராம மக்கள் செய்யும் பணி வரவேற்கதக்கது.
இதில் கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆலோசனைகள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தளவானூர் முதல் ஏ. குமாரமங்கலம் வரை தடுப்பணை கட்ட அரசுக்கு அனுமதி வேண்டி முறையாக எங்கள் துறை மூலம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆற்றின் குறுக்கே எங்கள் விருப்பத்திற்கு தடுப்பணை கட்டவே முடியாது. முறையான மேலிட அனுமதி பெற்று பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படும் ஒன்றுக்குதான் செலவீன கணக்கு காட்ட முடியும். அப்படி இருக்கும்பட்சத்தில் கிராம மக்கள் இணைந்து செய்திருக்கும் இந்த விஷயத்தில் நாங்கள் செலவு செய்ததாக கணக்கு காட்டவே முடியாது.
தடுப்பணை கட்டியதற்கு பொதுப்பணித்துறை செலவு செய்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கு தகவல் உரிமை பெறும் சட்டம் மூலம் விண்ணப்பித்தால் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க தயாராக இருக்கிறோம்’’என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT