Published : 17 Dec 2017 11:18 AM
Last Updated : 17 Dec 2017 11:18 AM
கன்னியாகுமரி மாவட்டம், இனயம் பகுதியில் வர்த்தக துறைமுகம் அமைக்கும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், கன்னியாகுமரி அருகே துறைமுகத்தை அமைக்க ஆய்வுப் பணி நடைபெற்றுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதற்கான இடம் இனயத்தில் தேர்வு செய்யப்பட்டு, ரூ. 28 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் துறைமுகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இனயத்தில் துறைமுகம் அமைந்தால் கடலோர கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி, போராட்டங்கள் நடைபெற்றன. இதன் காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாகவே துறைமுகத் திட்டத்துக்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில், கன்னியாகுமரி அருகே இத்திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகிய ுள்ளது.
5 இடங்கள் தேர்வு
இது குறித்து அதிகாரிகள் சிலர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைக்க சாதகமான சூழல் இனயத்தில்தான் உள்ளது. எனினும், குளச்சல், மணவாளக்குறிச்சி, கன்னியாகுமரி 1, 2 பாகங்கள் ஆகிய இடங்களையும் ஆய்வு செய்தோம்.
இப்போது கன்னியாகுமரி அருகே கோவளத்துக்கும், தெற்கு தாமரைக்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் துறைமுகம் அமைக்க ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
முதல் கட்டமாக ரூ.6,915 கோடி, இரண்டாம் கட்டமாக ரூ. 5,599 கோடி, மூன்றாம் கட்டமாக ரூ. 7,368 கோடியில் பணி நடைபெற உள்ளது. இப்பணிகள் குறித்தும், அதற்கு ஒப்புதல் பெறுவது குறித்தும் விவாதித்து, முன் மொழிய தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக சபை அதிகாரிகள் குழு, டெல்லிக்கு செல்ல உள்ளது என்றனர்.
ரகசியமாக நடக்கும் பணி
தூத்துக்குடி துறைமுக தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: இப்பணி ரகசியமாகவே நடந்து வருகிறது. இனயத்தைவிட, கன்னியாகுமரி பகுதியில் அமைக்கும்போது, நிலம் எடுத்தல் அளவு குறையும். மேலும், இனயத்தில் புதிதாக ரயில் வழித்தடங்களை உருவாக்க வேண்டும்.
ஆனால், கன்னியாகுமரியில் ரயில் வழித்தடம் இருப்பதால், அங்கு இருந்து குறைவான தூரத்துக்கு இருப்புப் பாதை அமைத்தால் போதும். இதற்காக கடந்த ஒரு மாதமாக தீவிரமாக ஆய்வு நடந்து வருகிறது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT