Published : 13 Sep 2023 08:49 PM
Last Updated : 13 Sep 2023 08:49 PM
மதுரை: “மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை ரெய்டு அதிகரிக்கும்” என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை செல்வதற்கு மதுரை விமான நிலையத்துக்கு வந்த சிவகங்கை காங்கிரஸ் எம்.பி., கார்த்தி ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியது: “சமுதாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசுவது வழக்கம். தமிழகத்தில் ஏற்றதாழ்வு இருக்கக்கூடாது என்பது தான் நமது சனாதனம். வடமாநிலத்தில் சனாதனத்துக்கு வேறு புரிதல் இருக்கலாம். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரையில் எம்மதமும் சம்மதம். மதச்சார்பற்ற கொள்கையை பின்பற்றுகிறோம். திமுகவை சாதி அரசியல் செய்யும் கட்சி என சொல்லக் கூடாது. தலைமையில் உள்ளவர்கள் தங்களது சதியை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. கருணாநிதியின் பலமே அது தான். அவர் எந்த சமுதாயத்துடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.
பாஜக அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் புள்ளி விவர பட்டியல் அறிவிக்க வேண்டும். மற்ற கட்சிகள் குறித்து நான் பதில் அளிக்க முடியாது. திமுகவுடன் கூட்டணி வலிமையாகவும், இண்டியா கூட்டணி வலுவாகவும் உள்ளது. மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் வெல்வோம்.
நாடாளுமன்றத்தில் பணிபுரிவோர் கையில் தாமரை சின்னம் பச்சை குத்தாத வரை நல்லது. அரசியல் கட்சிச் சார்ந்த சின்னங்களை பாஜக அரசு ஆடைகளில் கொண்டு வருவது ஏற்க முடியாது. ஆடையின் போட்டோவை பார்த்தபோது, சுடிதார், குர்தா போல் உள்ளது. காவல் துறைக்கு காவி உடை கொடுப்போம் என எச்.ராஜா கூறியிருப்பது பாஜகவின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் காவலர்களுக்கு காவி உடை வழங்குவோம் என்ற அவர்களின் ஆழ் மனதில் இருக்கும் விஷமம். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இண்டியா எதிர்க்கட்சிக் கூட்டத்தில் காவிரி விவகாரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு காவேரி மேலாண்மை ஆணையம், நீதிமன்றம் உள்ளது. அங்கு தீர்வு காணவேண்டும். ‘இண்டியா ’ பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணி. தேர்தல் நெருங்குவதால் தமிழ்நாட்டில் இனி அடிக்கடி அமலாக்கத்துறை சோதனைகள் அதிகமாகவே தொடரும்” இவ்வாறு கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...