Published : 13 Sep 2023 06:34 PM
Last Updated : 13 Sep 2023 06:34 PM
சென்னை: மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், எதன் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா, 2015-ம் ஆண்டில் அங்கு படித்த மாணவி ஒருவர், தனது பிறந்தநாளன்று ஆசிர்வாதம் வாங்க சென்றபோது, பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யபட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தெளிவற்றது. அரசியல்வாதிகள் மற்றும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர்கள், ஊடக விவாதம் ஆகியவற்றின் அழுத்தம் காரணமாக, முறையான விசாரணை இல்லாமல், மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். எனவே, மனுதாரருக்கு எதிராக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்" எனவும் வாதிடப்பட்டது.
இதையடுத்து முன்னாள் மாணவி அளித்த புகாரில், சிவசங்கர் பாபா மீது எதன் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது என கேள்வி எழுப்பிய நீதிபதி, சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...