Published : 13 Sep 2023 05:02 PM
Last Updated : 13 Sep 2023 05:02 PM

காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக ‘இண்டியா’ கூட்டணி குரல் கொடுக்காதது ஏன்? - தமாகா கேள்வி

சென்னை: "மத்தியில் ஆளும் பாஜக அரசை தேவையில்லாத காரணங்களுக்கு இண்டியா கூட்டணி என்ற பெயரில் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள், கர்நாடகாவின் சர்வாதிகார போக்குக்கு எதிராக இண்டியா கூட்டணியில் குரல் கொடுக்காதது ஏன்?" என்று தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 86-வது கூட்டம் டெல்லியில் நேற்று (செப்.12) நடைபெற்றது. இக்குழுவின் தலைவர் வினித்குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநில நீர்வளத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மைக் கூட்டத்தில், வினாடிக்கு ஐந்தாயிரம் கன அடி நீரை 15 நாட்களுக்குத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதை நிறைவேற்றித் தரக் கோரி நேற்று காவிரி ஒழுங்காற்று குழுவில் தமிழகம் முறையிட்டது.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை. தமிழகத்தின் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று நிறுத்தாச்சனியமாக மறுத்துள்ளார். இப்பொழுது தமிழக விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் செய்யப் போவது என்ன? காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழகத்துக்கு கர்நாடக அரசு, இன்று வரை 102.30 டிஎம்சி தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கர்நாடக இதுவரை 35 டிஎம்சி தண்ணீரைக் கூட வழங்கவில்லை.

கர்நாடகத்திலிருந்து இதுவரை தமிழகத்துக்கு வந்த தண்ணீர்கூட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் வந்ததே தவிர கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டது அல்ல. ஏற்கெனவே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரும், இந்திய கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக பேசி வருகின்றார்கள். கர்நாடக அரசின் இந்த நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது. கர்நாடக அணைகளில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்கப்படவில்லை என்றால், குறுவைப் பயிர்களைக் காப்பாற்றுவதற்கு வேறு வழியே இல்லை.

ஆனால், இந்தச் சூழலை தமிழகம் எவ்வாறு சமாளிக்கப் போகிறது? கர்நாடகத்திடமிருந்து எவ்வாறு தண்ணீர் பெறப் போகிறது? இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக முதல்வர், ஆளும் திமுக கட்சியும் தமிழக மக்களுக்கு என்ன செய்யப் போகிறது என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும். கர்நாடகாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சி பக்கத்து மாநிலத்துக்கு தர வேண்டிய முறையான உரிமையை கூட தர மறுக்கும் சூழலில் இண்டியா கூட்டணி இந்தியாவை ஒருங்கிணைக்கப் போகின்றதா என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் பதில் தர வேண்டும்.

மத்தியில் ஆளும் பாஜக அரசை தேவையில்லாத காரணங்களுக்கு இண்டியா கூட்டணி என்ற பெயரில் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள் கர்நாடகாவின் சர்வாதிகார போக்குக்கு எதிராக இண்டியா கூட்டணியில் குரல் கொடுக்காதது ஏன்? தேர்தல் வரும்போது எல்லாம் பொய்யான வாக்குறுதியை கூறும் ஸ்டாலின், நீட் விவகாரம் தலை எடுத்த போது இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து செய்யப்படும் என்கிறார். அடுத்து இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் காவிரியில் தண்ணீர் திறந்து விட ஆவண செய்வேன் என்று சொல்வார்களோ, என்னவோ?

அதுவரை தமிழக மக்களின் கதி? ஒன்று தமிழகத்துக்கு தரவேண்டும் என்று, உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு ஆணையம் உத்தரவிட்டதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது கர்நாடக சர்வாதிகாரப் பேச்சுக்கு எதிராக இண்டியா கூட்டணியை விட்டு ஸ்டாலின் விலக வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x