Published : 13 Sep 2023 05:04 PM
Last Updated : 13 Sep 2023 05:04 PM
கோவை: கோவை மாநகரில் பெருகிவரும் தெருநாய்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாததால் மக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை ஒப்பிடும்போது, தற்போது தெருநாய்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்ய சீரநாயக்கன் பாளையம், உக்கடம் ஆகிய இடங்களில் அறுவை சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டன. மாநகராட்சியின் மேற்கு மண்டலத்தில் பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு சீரநாயக்கன்பாளையத்திலும், மற்ற 4 மண்டலங்களில் பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு உக்கடத்திலும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் உக்கடம் மையம் சில காரணங்களால் தொடர்ந்து இயங்கமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் தெருநாய்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கத் தொடங்கியது.
மாநகரில் 8 ஆயிரம் வீதிகள் உள்ளன. இதில் தெருநாய்கள் இல்லாத வீதிகளே இல்லை என்ற அளவுக்கு பெருகிவிட்டன. கும்பலாக சுற்றும் தெருநாய்கள் சாலைகளில் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களையும், வாகனங்களில் செல்வோரையும் துரத்துகின்றன. கடிக்கவும் செய்கின்றன. தெருநாய்க்கு பயந்து வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்கி காயமடையும் நிலை உள்ளது.
இதுகுறித்து, சமூக செயல்பாட்டாளரான ஆவாரம்பாளை யத்தைச் சேர்ந்த ராஜ்குமார் கூறும்போது, “ரேஸ்கோர்ஸ் நடைபாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள், தெருநாய்களுக்கு பிஸ்கட் உள்ளிட்ட உணவுகளை அளிக்கின்றனர். அவை சாப்பிட்டுவிட்டு வேறு இடத்துக்குச் செல்லாமல் அங்கேயே தங்கி விடுகின்றன. இறைச்சி கடைகள் உள்ள பகுதிகளில் கொட்டப்படும் கழிவு இறைச்சியை தின்று தெருநாய்கள் அங்கேயே தங்கி விடுகின்றன.
சில வீதிகளில், ஏதாவது ஒரு குடியிருப்புவாசி தனது வீட்டின் பாதுகாப்புக்காக, தெருநாய்களுக்காக சாலையில் உணவு கொட்டி வைக்கிறார். அவற்றை சாப்பிடும் தெருநாய்கள் அங்கேயே தங்கி விடுகின்றன. தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சையே சரியான தீர்வாகும். எனவே, 5 வார்டுகளுக்கு ஒரு மையம் என கருத்தடை அறுவை சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தொய்வில்லாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோவை மாநகரில் தன்னார்வ அமைப்பின் மூலம் உலகளாவிய கால்நடை மருத்துவ சேவைகள் பணிக்குழுவுடன் இணைந்து, தெருநாய்கள் எண்ணிக்கை குறித்த கணக் கெடுப்பு நடத்தப்பட்டது. ஸ்மார்ட் போனில் செயலியைப் பயன்படுத்தி நாய்களின் இருப்பிடம், அவற்றின் வயது, பாலினம், உடல்நலம், தோல் நிலைகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அந்த ஆய்வின்படி, கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தில் 22,069 தெருநாய்கள், தெற்கு மண்டலத்தில் 31,499 தெருநாய்கள், மேற்கு மண்டலத்தில் 22,085 தெருநாய்கள், மத்திய மண்டலத்தில் 11,017 தெருநாய்கள், கிழக்கு மண்டலத்தில் 24,404 தெருநாய்கள் என மொத்தம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 74 தெருநாய்கள் உள்ளன.
கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 46,299 தெருநாய்கள்தான் இருந்தன. இவற்றை கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் சீரநாயக்கன் பாளையம், உக்கடம், ஒண்டிப்புதூர் ஆகிய இடங்களில் கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள் இயங்கி வருகின்றன. தினமும் சராசரியாக 25 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது’’ என்றனர்.
மேலும், “நாய்களை கொல்ல அனுமதியில்லை. ஒட்டுமொத்தமாக நாய்களை அப்புறப்படுத்தி ஒரே இடத்தில் பராமரிப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே, கருத்தடை செய்வதன் மூலம் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதுதான் ஒரே வழி” என்றனர்.
மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறும்போது, ‘‘வாகனங்கள் மூலம் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடைக்கு பின்னர் மீண்டும் அங்கேயே விடப்படுகின்றன. இதுவரை 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கருத்தடை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT