Published : 13 Sep 2023 03:19 PM
Last Updated : 13 Sep 2023 03:19 PM
மும்பை: சனாதன தர்மம் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது மும்பை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் முதல் தகவல் அறிக்கை பதிவு: மும்பையில் மிரா சாலையில் வசிக்கும் நாக்நாத் காம்ப்ளி (வயது 38) என்ற தனியார் நிறுவன ஊழியர், உதயநிதிக்கு எதிராகக் கொடுத்த புகாரின் பேரில் மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153A, 295A ஆகியவற்றின் கீழ் உதயநிதிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டப் பிரிவுகள் சொல்வது என்ன? - மத, இன, மொழி ரீதியாக இரு குழுக்களுக்கு இடையே பகைமையை ஏற்படுத்தும் விதமாகச் செயல்படுவதை பிரிவு 153A குற்றம் என கூறுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க இச்சட்டத்தில் இடம் உண்டு. ஒருவது மத நம்பிக்கையை காயப்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே ஒருவர் பேசினாலோ, எழுதினாலோ அதை குற்றம் என பிரிவு 295A கூறுகிறது. மதங்களை இழிவுபடுத்துவதைத் தடுக்கும் நோக்கிலான இந்த சட்டப்படி ஒருவர் குற்றம் இழைத்தது உறுதியானால், அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
உதயநிதி பேச்சு: சென்னையில் கடந்த 2-ம் தேதி நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், "இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்" என தெரிவித்திருந்தார்.
உ.பி.யில் வழக்குப் பதிவு: அமைச்சர் உதயநிதியின் பேச்சு மத உணர்வுகளை புண்படுத்துவதாக உத்தர பிரதேசத்தின் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் ஹர்ஷ்குப்தா, ராம்சிங் லோதி ஆகியோர் சமீபத்தில் புகார் கொடுத்தனர். இதன்பேரில், உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கே ஆகிய 2 பேர் மீதும் உத்தர பிரதேச போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர். இவர்கள் இருவர் மீதும் 295-ஏ (மத உணர்வுகளை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு செயல்படுதல்), 153-ஏ (வெவ்வேறு மதக் குழுக்கள் இடையே பகைமையை ஊக்குவித்தல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜக எதிர்ப்பு: அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் போன்றவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சனாதன தர்மத்துக்கு எதிரான பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருந்தார். இதையடுத்து, மத்திய அமைச்சர்கள் பலரும் உதயநிதியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், "நமது முன்னோர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து பாதுகாத்த சனாதன தர்மத்தை, சிலர் ஒழிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்கள். இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவ்வாறு பேசுபவர்களின் நாக்கு பிடுங்கப்படும்; கண்கள் தோண்டப்படும். சனாதன தர்மத்துக்கு எதிராகப் பேசிவிட்டு இனி ஒருவரும் இந்த நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது" என்று மிரட்டல் விடுத்தார்.
பாஜக தேசியத் தலைவர் நட்டா, நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், "இண்டியா கூட்டணியின் கூட்டம் மும்பையில் நடந்து முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். அவருக்கு ஆதரவாகவும் சனாதன தர்மத்துக்கு எதிராகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே பேசுகிறார். சனாதன தர்மத்துக்கு எதிராக இண்டியா கூட்டணி உருவாகி இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினின் பேச்சு குறித்து இண்டியா கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும், சோனியா மற்றும் ராகுலும் தங்கள் கருத்தை தெளிவுபடுத்த வேண்டும். எந்த ஒரு மதத்தைப் பற்றியும் ஆட்சேபனைக்குரிய அறிக்கைகளை வெளியிட அரசியலமைப்பில் உரிமை உள்ளதா என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும்? அல்லது அரசியலமைப்பின் விதிகள் பற்றி இண்டியா கூட்டணிக்குத் தெரியாதா? சனாதன தர்மத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தங்கள் கடைகளில் அன்பு என்ற பெயரில் வெறுப்பை ஏன் விற்கிறார்கள்? இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இயங்கும் வெறுப்பு மெகா மால் அது. மக்களைப் பிரித்து ஆள்வதுதான் அதன் நோக்கம்" என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT