Published : 13 Sep 2023 02:09 PM
Last Updated : 13 Sep 2023 02:09 PM
சென்னை: "இந்தியாவை காப்பாற்றியாக வேண்டும் என்று சொன்னால், இண்டியா கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும்” என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கப் பாண்டியன் இல்லத் திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியது: "திமுகவை பொறுத்தவரைக்கும், ஆட்சியில் இருந்தாலும் சரி, ஆட்சியில் இல்லையென்று சொன்னாலும் சரி, மக்களைப் பற்றி சிந்திக்கின்ற, மக்களைப் பற்றி கவலைப்படுகிற ஒரு கட்சிதான் திமுக. அதனால்தான் தொடர்ந்து வெற்றியை நாம் இன்றைக்கு பெற்று வருகிறோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மிகப் பெரிய வெற்றி தமிழக மக்கள் நமக்கு தேடித் தந்தார்கள். அதற்குப் பின்னால் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆறாவது முறையாக திமுக ஆட்சி உருவாக்கித் தருவதற்கு மக்கள் சிறப்பான ஆதரவை தந்தார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு, உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அந்த உள்ளாட்சி தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். அதற்குப் பிறகு நடைபெற்றிருக்கக் கூடிய இடைத்தேர்தல்கள், அந்த இடைத்தேர்தலிலும் மிகப் பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம்.
தொடர்ந்து வெற்றியை பெறுவதற்கு காரணம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், நாம் ஆட்சி வருவதற்கு முன்பு, நாம் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை, என்னென்ன பணிகளை மக்களுக்கு செய்யப் போகிறோம் என்று வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை தந்தோம். அந்த அடிப்படையில் அதை நம்பி தமிழக மக்கள் நமக்கு ஆதரவு தந்தார்கள். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு அப்படிப்பட்ட உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை இன்றைக்கு படிப்படியாக நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். இன்னும் சொல்கிறேன். 100-க்கு 99 சதவீதம் இதுவரையில் நாம் தந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம். மீதம் இருக்கிற 1 சதவீதம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி நூற்றுக்கு நூறு சதவீதம் நிறைவேற்றக்கூடிய திட்டமாகத்தான் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” நிறைவேற்றப்பட இருக்கிறது.
இப்படி எத்தனையோ திட்டங்கள், மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதற்கு “விடியல் திட்டம்” என்ற பெயரில் அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதற்குப் பின்னால், “புதுமைப் பெண் திட்டம்” பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் அந்த மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் அதையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதேபோல், “நான் முதல்வன்” திட்டம். இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரக்கூடிய, அவர்களுக்கு பயிற்சியை தரக்கூடிய, அந்தத் திட்டம் இன்றைக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
வருகிற செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் அண்ணா பிறந்தநாள் அன்று கருணாநிதி பெயரால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்”. அது காஞ்சிபுரத்தில், அவர் பிறந்த அந்த மண்ணில் அந்தத் திட்டத்தை நான் தான் தொடங்கி வைக்கப் போகிறேன். அப்படி தொடங்கிவைக்கப்படுகின்ற நேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு நகரத்திலும், நம்முடைய அமைச்சர்கள் எல்லாம் கலந்து கொண்டு அந்தத் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார்கள். எவ்வளவு பேர் அந்தத் தொகையை பெற இருக்கிறார்கள் என்று சொன்னால், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் அந்தத் தொகையை வழங்குவதற்காக திட்டமிட்டிருக்கிறோம். மாதம் 1000 ரூபாய் வழங்கப்படயிருக்கிறது என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
எப்படி தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சியை நீங்கள் எல்லாம் உருவாக்கி தந்தீர்களோ, அதேபோல வர இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல், விரைவில் குறித்த நேரத்தில் வரப் போகிறதா அல்லது அதற்கு முன்பே வந்துவிடுமா என்ற ஒரு எண்ணம், சந்தேகம் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது. முன்கூட்டியே தேர்தல் வந்தாலும், அதில் நாம் தான் 40-க்கு 40, புதுவையும் சேர்த்து வெற்றி பெறப்போகிறோம். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
சமீபத்தில் கூட இடைத்தேர்தல்கள் நடந்திருக்கிறது. நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடந்திருக்கிறது. கேரளா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் என்று இப்படி பல மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடந்திருக்கிறது. அப்படி நடைபெற்றிருக்கக்கூடிய இடைத்தேர்தல்களில் “இண்டியா” கூட்டணியில் இருக்கின்ற கட்சிகள்தான் வெற்றி பெற்றிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி அங்கெல்லாம் தோல்வியை சந்தித்திருக்கிறது.
அதுமட்டுமல்ல, ஒரு சில மாதங்களுக்கு முன்பு, அருகில் இருக்கக்கூடிய கர்நாடக மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல் நடந்தது. அதிலும், பாரதிய ஜனதா கட்சி வீழ்த்தப்பட்டு அங்கே நம்முடைய கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியே மிகப் பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது.
இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த ஏழு ஆண்டுகளில் எங்கெங்கெல்லாம் தேர்தல் நடந்திருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். தமிழகம், கேரளா, பிஹார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திரா, பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் என்று இங்கெல்லாம் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. அங்கெல்லாம் நடைபெற்ற தேர்தல்களில் ஒன்றியத்தில் இருக்கக் கூடிய பாரதிய ஜனதா கட்சி தோற்கடிக்கப்பட்டு அங்கெல்லாம் நம்முடைய எதிர்க்கட்சிகளாக இருக்கக் கூடியவர்கள் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஏற்கெனவே “இண்டியா” கூட்டணி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. பிஹாரில் முதல் கூட்டத்தை நடத்தி, இரண்டாவதாக கர்நாடகாவில் நடத்தி, மூன்றாவதாக மும்பையில் நடத்தி, அந்தக் கூட்டத்தின் மூலமாக பல்வேறு முடிவுகள் எல்லாம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படி அமைக்கப்பட்டிருக்கக் கூடிய “இண்டியா” கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவை நாம் காப்பாற்ற முடியும்.
இந்தியாவை காப்பாற்றியாக வேண்டும் என்று சொன்னால், இண்டியா கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும். எப்படி சட்டமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை தேடித் தந்தீர்களோ, அதேபோல கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை தேடித் தந்தீர்களோ, அதேபோல், இந்தியா முழுவதும் அந்த வெற்றியை தேடித் தரவேண்டும். வர இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் புதுவையை சேர்த்து 40 இடங்களிலும், மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தாருங்கள்" என்று முதல்வர் பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT