Published : 13 Sep 2023 01:44 PM
Last Updated : 13 Sep 2023 01:44 PM
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், டெல்டா பாசனத்துக்காக அணையின் கீழ்மட்ட மதகு வழியாக 3,500 கன அடி நீர் இன்று காலை முதல் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மட்ட கால்வாய் பகுதிகளில் குளிக்க நீர்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்றைய தினம் நீர்மட்டம் 103 அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 867 கனஅடியாகவும் இருந்தது. விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. ஜூலை மாதம் 30-ம் தேதி அதிகபட்சமாக 14 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. பின்னர், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்பட்ட நிலையில் நீர் திறப்பும் அதிகரித்தும், குறைத்தும் வந்தனர்.
இந்நிலையில், அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 670 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 392 கன அடியாக சரிந்ததுள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 6,500 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 44.06 அடியாகவும், நீர் இருப்பு 14.27 டி.எம்.சி-யாகவும் நீடிக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45 அடிக்கு கீழ் செல்லும் பொழுது சுரங்க மின் நிலையம் வழியாக நீர் வெளியேற்ற முடியாது.
அதேபோல், அணை மின் நிலையம் வழியாக அதிகபட்சமாக 4000 கனஅடி நீர் வெளியேற்றப்படும். மேட்டூர் அணை நீர்மட்டம் 44 அடியாக சரிந்த நிலையில், டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக சுரங்க மின் நிலையம் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு, அணையின் கீழ் மட்ட 5 கண் மதகு வழியாக தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கடந்த வாரம் கீழ்மட்ட மதகுகள் பராமரிப்பு பணியையும், தண்ணீர் திறப்பதற்கான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். தொடர்ந்து, இன்று காலை 10:30 மணி முதல் கீழ்மட்ட 5 கண் மதகு வழியாக விநாடிக்கு 3,500 கன அடியும், அணை மின் நிலையம் வழியாக 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கீழ்மட்ட மதகு வழியாக சீறி பாய்ந்தது செல்லும் தண்ணீரால் மட்ட கால்வாய் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கு நீர்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT