Published : 13 Sep 2023 05:41 AM
Last Updated : 13 Sep 2023 05:41 AM
சென்னை: வடகிழக்கு பருவமழையின் போது மின் விநியோகத்தில் தடங்கள் ஏற்படாமல் சீரான மின் விநியோகம் வழங்குமாறு அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து ஆய்வை காணொலி மூலம் மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், அனைத்து மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மின் பகிர்மான வட்டங்களில் 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்புக் கவனம் செலுத்திஅதற்கான காரணத்தைக் கண்டறிந்து உடனடியாக சரிசெய்வதற்கு, அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார். மேலும், `மின்னகம்' மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், அனைவருக்கும் தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளு மாறும் அறிவுறுத்தினார்.
மின்சார சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்பட வேண்டும். பணியாளர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் அளித்து பாதுகாப்பான முறையில் மின் கட்டமைப்பைச் சீர்செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்.
அனைத்து மின்வாரிய வாகனங்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். தேவை ஏற்பட்டால் அருகாமையில் உள்ள மின் பகிர்மான வட்டங்களிலிருந்து ஆட்களை பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.
மேலும், பருவ மழைக் காலங்களின்போது மாவட்ட நிர்வாகத்தினருடன் எப்போதும் தொடர்பில்இருக்குமாறும் அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.
அனைத்து மேற்பார்வை பொறியாளர்களும் தமது அலுவலகங்களில் இதற்கென தனியாகக் குழு அமைத்து கன மழையின்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சேதாரங்கள் குறித்தும் ஆய்வுசெய்து உடனடியாக அனைவருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மின் கட்டமைப்பில் ஏற்படும் சேதாரங்களைப் பொருத்து சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர்கள் தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் தளவாடப் பொருட்களுடன் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்கு வேண்டும்.
குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்தமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனுக்குடன் கள ஆய்வு செய்து மின் விநியோகத்தை உடனடியாக சீர் செய்யுமாறும் சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் அமைச்சர் உத்தரவிட்டார்.
பருவ மழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் முன்னுரிமை அடிப்படையில், மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் குடிநீர் இணைப்புகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT