Published : 12 Dec 2017 12:19 PM
Last Updated : 12 Dec 2017 12:19 PM
புதுச்சேரி, காரைக்கால் கோயில்களில் தை மாதம் 1-ம் தேதி முதல் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 2017 -18ம் ஆண்டு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் புதுச்சேரி, காரைக்கால் கோயில்களில் அன்னதானத் திட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அது தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் இந்து அறநிலைய துறை ஆணையர் தில்லைவேல் மற்றும் பல்வேறு கோயில்களின் தனி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, கோயில்களில் நிதி மிகவும் குறைவு. அரசும் குறைவான நிதி வழங்குகிறது. பக்தர்கள் கொடுக்கும் நன்கொடையை வைத்துத்தான் அன்னதானம் வழங்க முடியும். வெள்ளி, சனிக்கிழமைகளில் தயிர், பொங்கல் உள்ளிட்ட சாதம் வழங்குகிறோம்.
பக்தர்கள் கொடுக்கும் நன்கொடையை வைத்து எல்லா நாட்களும் அன்னதானம் போட முடியாது. காரணம் நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை செலவு ஆகிறது. மணக்குள விநாயகர் கோயிலில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அன்னதானம் வழங்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. ஆனால் அது செயல்படுத்த முடியவில்லை. ஆதலால் வருடம் தோறும் அன்னதானம் போடுவது என்பது மிகவும் சிரமம். அரசு போதிய நிதியை ஏற்படுத்தித்தர வேண்டும், என்று கருத்து தெரிவித்தனர்.
இதனைக் கேட்டறிந்த முதல்வர் நாராயணசாமி பின்னர் பேசும்போது, அன்னதானத் திட்டம் என்பது முறையாக வழங்கப்பட வேண்டும். பெரிய கோயில்களில் தை 1ம் தேதி முதல் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட வேண்டும்.
மேலும் கோயில்களின் தல புராணங்கள், விழாக் காலங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே அது குறித்த விவரங்களை உடனே அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். அதோடு கோயில்களின் சொத்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்படும். கோயில்களில் வருவாயைப் பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில், வேதபுரீஸ்வரர் கோயில், குரு சித்தனந்தா கோயில், வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோவில், காரைக்கால் அம்மையார் கோயில், திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில், அம்பகரத்தூர் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வரும் தை 1ம் தேதி முதல் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அன்னதானத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
தொடர்ந்து பக்கதர்களின் வரவேற்பைப் பொறுத்து பல்வேறு கோயில்களில் விரிவு படுத்தப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT