Published : 06 Jul 2014 04:54 PM
Last Updated : 06 Jul 2014 04:54 PM
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலை நிறுத்தும் வகையில், முதல்வர் ஜெயலலிதாவின் சமரசம் பற்றி வருமான வரித்துறை முடிவெடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு விஜயகாந்த் எழுதிய கடிதம்:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது வருமான வரித்துறையினர், 1991-92 மற்றும் 1992-93 ஆண்டுகளில் ஜெயலலிதா வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என்றும், 1993-94 ஆண்டு தனிப்பட்ட வருமானத்திற்கான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்றும் 1996-ல் வழக்கு தொடர்ந்தனர்.
சுமார் 18 ஆண்டு காலமாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது. அதில் சுமார் 8 ஆண்டுகள் ஆட்சியிலும், 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமலும் இருந்திருக்கிறார்.
பல்வேறு காரணங்களை கூறி, ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் வாய்தா வாங்கி வருகிறார். ஜெயலலிதா கண்டிப்பாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி பலமுறை உத்தரவிட்டும், இந்த 18 ஆண்டுகளில் ஒரு முறை கூட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை.
இறுதியாக, ஜெயலலிதாவின் வழக்கறிஞரிடம் கருத்து கேட்டு, அவரின் ஒப்புதலுடன் கடந்த ஜூன் 30ம் தேதி அன்று ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டியவர்களே சட்டத்தையும், நீதியையும் மதிக்காமல் இருக்கலாமா? சராசரி இந்திய குடிமகன் இது போன்று செயல்பட முடியுமா? அதற்கு சட்டமும், நீதிமன்றமும் இடம் கொடுக்குமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தற்போது முதல்வர் ஜெயலலிதா வருமான வரித்துறையின் இயக்குநர் ஜெனரலிடம் கம்பவுண்டிங் முறையில், அதாவது வருமான வரி பாக்கி, அதற்குரிய அபராதம் மற்றும் வருமான வரி பிரச்சினை உள்ளிட்ட அனைத்தையும் சமரசமாக தீர்த்துக் கொள்ளத் தயார் என்று மனு அளித்திருப்பதாகவும், அதுவரையிலும் இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்றும், கடந்த ஜூன் 30ம் தேதி அன்று நேரில் ஆஜராகாமல், தன் வழக்கறிஞர் மூலம் முதல்வர் ஜெயலலிதா சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதியிடம் கேட்டுள்ளார். அதற்கு மத்திய அரசினுடைய வருமான வரித்துறையின் வழக்கறிஞரும் எவ்வித மறுப்பும் சொல்லாத நிலையில், முதல்வர் ஜெயலலிதா கூறிய காரணத்தை நீதிபதி ஏற்றுக் கொண்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.
முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 1991 முதல் 1996 வரை யார், யாரிடம், எப்படியெல்லாம் சொத்துக்களை வாங்கி குவித்திருக்கிறார் என்பதை 2500 பக்க சாட்சியங்கள் அடங்கிய ஆவணங்களுடன் தெரிவித்துள்ளார். அதில் 306 சொத்துகள் வாங்கப்பட்டுள்ளது என்றும், அன்றைய தேதியில் அதன் மதிப்பு 66 கோடிக்கு மேல் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுடன் வருமான வரித்துறை காம்பவுண்டிங் முறையில் சமரசமாக தீர்வு கண்டால் அதன் விளைவு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது நடைபெற்று வரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் போக்கை திசை திருப்பி விடும் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.
எனவே, இதை கருத்தில் கொண்டு வருமான வரித்துறை ஜெயலலிதாவின் சமரசம் பற்றி முடிவெடுக்க வேண்டும் என்றும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலை நிறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்தக் கடிதத்தில் விஜயகாந்த் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவருக்கு கடிதம்
இதனிடையே, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு விஜயகாந்த் அனுப்பிய மற்றொரு கடிதத்தில், "தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக திடீரென தமிழக தலைமை தேர்தல் அதிகாரி 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.
அப்பொழுதே தமிழகத்தில் இத்தடை உத்தரவிற்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து மிகப் பெரிய எதிர்ப்பு எழுந்தது. ஏனெனில் தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் இருக்கின்ற இந்தியாவின் பிற மாநிலங்களில் கூட 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஆகவே, தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு அனுசரணையாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் கருதுகிறது.
ஆளும்கட்சி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவசங்களை விநியோகிக்கவும், பல்வேறு தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடவும் இதை பயன்படுத்திக் கொண்டது. தேர்தலில் பணம் கொடுப்பதை தடுக்க முடியவில்லை என்பதை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
எனவே, தேவையில்லாமல் 144 தடை உத்தரவு பிறப்பித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மீதும், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி மீதும் தேமுதிக சார்பில் வழக்கு தொடர எங்களுக்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT