Published : 12 Sep 2023 06:52 PM
Last Updated : 12 Sep 2023 06:52 PM

மதுரை மீனாட்சியம்மன் கோயில் வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோயில் வீதிகளில் நடைபாதைகளில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகள் | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் வீதிகளில் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு நடைபாதை ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. மாநகராட்சி ‘கை’கட்டி வேடிக்கைப் பார்ப்பதால் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும், கோயில் வீதிகளில் ஷாப்பிங் செல்லும் மக்களும் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக கொண்டு ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் ஆக்கிரமிப்பு இல்லாத விசாலமான சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் வசதி, திறந்தவெளி மின் கம்பங்கள், மின் வயர்கள் தொங்காத ‘ஸ்மார்ட் சாலைகள்’ சாலைகள் அமைப்பது முதன்மை நோக்கமாக இருந்தது.

அதன் அடிப்படையில் சித்திரை வீதியில் கருங்கல் சாலையும், ஆவணி வீதிகளில் பேவர் பிளாக் சாலையும், மாசி வீதிகளில் கான்கிரீட் சாலையும் அமைக்கப்பட்டன. அதுபோல், மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரக்கூடிய துணை பாதைகளும் இந்த திட்டத்தில் மேம்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டன.அதனால், இந்த சாலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி விசாலமாக அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றாமலே பெயரளவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டன.

அதுபோல் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் கூறிய எந்த அம்சங்களும் இந்த சாலைகளில் இடம்பெறவில்லை. வழக்கம்போல் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தன. மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு நடைபாதைகளில் கடைகள் பெருகிவிட்டன. அதுபோல், சாலைகளில் நடந்து செல்வதற்காகவே போடப்பட்ட நடைபாதைகளை ஆங்காங்கே காணவில்லை. அந்த இடங்களில் நடைபாதை வியாபாரிகள் கடை அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் மணிகண்டன் கூறுகையில், ‘‘கோயிலை சுற்றியுள்ள சாலைகளில் மிகப் பெரிய கார்ப்பரேட் ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் உள்ளன. முக்கிய பண்டிகை நாட்கள், வார விடுமுறை நாட்களில் மீனாட்சியம்மன் கோயில் வீதிகளில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு ஷாப்பிங் செல்ல வருவோர் கூட்டம் திருவிழா போல் காணப்படும்.

இந்த சாலைகளில் உள்ள கடைகளில் உள்ள பெரும்பான்மையான கடைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கான ‘பார்க்கிங்’ வசதியில்லை. அதனால், கடைகளில் பணிபுரிவோர் முதல் வாடிக்கையாளர்கள் அனைவருமே, இந்த சாலைகளில் நிறுத்தி செல்வார்கள். அதனால், ஒவ்வொரு சாலைகளிலும் வாகன ஓட்டிகள் இரண்டு அடுக்கில் பார்க்கிங் செய்யப்டுவதால் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது.

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் வந்தால் மீனாட்சியமமன் கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் பழமை மாறாமல் புதுப்பொலிவு பெறும் என எதிர்பார்த்தநிலையில் இந்த திட்டம் நிறைவேற்றியப் பிறகும் சுமாராக கூட இல்லாமல் ஸ்மார்ட் சிட்டி சாலைகள் அலங்கோலமாக காட்சியள்ளிக்கின்றன. அதுபோல், சித்திரைவீதி, நோதாஜி சாலை, பெரியார் பஸ்நிலையம் போன்ற மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள சாலைகளில் பார்க்கிங் வசதி இல்லாமல் போக்குவரத்து நெரிசல், கோயில் சுற்றுலாவும், அதனை நம்பியுள்ள வர்த்தக வளர்ச்சியும் தடைப்படுகிறது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x