Published : 12 Sep 2023 05:36 PM
Last Updated : 12 Sep 2023 05:36 PM
ஓசூர்: ஓசூர் பாகலூர் சாலையில் வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து அகற்றி விட்டு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. ஓசூர் பாகலூர் சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், கடந்த 1984-ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, 1986-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன.
இதில், மொத்தம் 1,236 வீடுகள் உள்ளன. தற்போது, 906 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 303 வீடுகள் அரசு ஊழியர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டதில், வலுவிழந்த 60 வீடுகளில் குடியிருந்தவர்களை வெளியேற்றி அந்த வீடுகள் காலியாக உள்ளன.இக்குடியிருப்பு கட்டப்பட்டு 37 ஆண்டுகள் ஆன நிலையில், அனைத்து வீடுகளும் சேதமடைந்து, கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதோடு, அனைத்து வீடுகளும் வலுவிழந்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.
மேலும், குடியிருப்பு பகுதியில் சாக்கடை கழிவு நீர் செல்ல வழியில்லாததால், குடியிருப்புகளைச் சுற்றிலும் கழிவுநீர் தேங்கும் நிலையுள்ளது. மேலும், குடியிருப்பு பகுதியில் குப்பைக் கழிவுகளை முறையாக அகற்றுவதில்லை. குடிநீரும் சீராக விழுவதில்லை. குடியிருப்புப் பகுதியைச் சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்து சுகாதாரமற்ற நிலை நிலவுகிறது. மேலும், மூடப்பட்டுள்ள வீடுகளில் எலிகள் மற்றும் விஷ ஜந்துகள் நடமாட்டம் இருப்பதாக குடியிருப்பு மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக குடியிருப்பு மக்கள் கூறியதாவது: விலைக்கு வாங்கிய வீடுகளைத் தொடக்கத்தில் 10 ஆண்டுகள் வரை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, வீட்டை வாங்கியவர்களே பராமரிக்க வேண்டும் என வீட்டு வசதி வாரியம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான வீடுகள் வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ள நிலையில் வீடுகளை விலைக்கு வாங்கியவர்கள் பலர் பொருளாதார வசதியில்லாததால் பராமரிக்க முடியாத நிலையுள்ளது.
எனவே, அரசு வீடுகளை இடித்து அகற்றி புதிய வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்தால் பயனுள்ளதாக இருக்கும். மேலும், குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக வீட்டுவசதி வாரிய அலுவலர்கள் கூறியதாவது: பாகலூர் சாலையில் உள்ள விற்பனை செய்யப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை தொடக்கத்தில் 3 ஆண்டுக்கு ஒருமுறை, பின்னர் 5 ஆண்டுக்கு ஒரு முறை வீட்டு வசதி வாரியம் மூலம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
தற்போது, வீடுகளை விலைக்கு வாங்கியவர்களே பராமரித்துக் கொள்ள வேண்டும். வாடகை வீடுகளில் மிகவும் மோசமாக இருந்த 60 வீடுகளில் உள்ளவர்களை காலி செய்து விட்டோம். மேலும், வலுவிழந்த வீடுகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்தால் மட்டுமே வலுவிழந்த வீடுகளை இடிக்க நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT