Published : 12 Sep 2023 03:58 PM
Last Updated : 12 Sep 2023 03:58 PM
குடியாத்தம்: பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடியாத்தம் நகரில் புதிய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கான புதிய திட்டங்கள் ரூ.1.42 கோடியில் தயாரிக்கப்படுள்ளதாக நகராட்சி மன்றத் தலைவர் செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாக குடியாத்தம் உள்ளது. கடந்த 1886-ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்ட குடியாத்தம் நகரம் கடந்த 1973-ம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தீப்பெட்டி, கைத்தறி நெசவு என உற்பத்தி தொழில் நகரமாகவும் விளங்கி வருகிறது. ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடியாத்தம் நகரைச் சுற்றியுள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொழில், வேலைவாய்ப்பு, கல்வி என பல்வேறு நிலைகளில் இந்த நகரையே நம்பியுள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளில் நகரம் பெரியளவில் வளர்ந்து வருகிறது. தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. குடியாத்தம் நகரைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து வரும் மக்கள் நகரை ஒட்டியுள்ள பகுதிகளில் வேகமாக குடியேறி வருகின்றனர். நகராட்சி உள்கட்டமைப்பு அதே நிலையில் நீடித்து வரும் நிலையில் நகரின் எல்லை மட்டும் விரிவடைந்து வருகிறது.
ஏற்கெனவே, நகரில் இருந்த பேருந்து நிலையம் போதுமான அளவுக்கு இடவசதி இல்லை என்பதால் புதிய பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டது. தற்போது, பெருகிவரும் மக்கள் தொகை, நகருக்கு வந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை, பேருந்துகளின் எண்ணிக்கை போன்ற வற்றால் தற்போதுள்ள பேருந்து நிலையம் இட நெருக்கடியுடன் காணப்படுகிறது. புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வரை நெரிசல், நெரிசல் மட்டும் இருந்து வருகிறது.
குடியாத்தம் நகரில் இருந்து சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், திருத்தணி, திருவண்ணாமலை, ஆரணி, பெங்களூரு, பலமநேர், சித்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், பெரு நகரங்கள், புறநகர பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
அதேபோல், பேரணாம்பட்டு, ஆம்பூர் நகரங்களுக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதில், புதிய பேருந்து நிலையத்தில் போதுமான குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அதேபோல், பழைய பேருந்து நிலையம் தாழ்வானப் பகுதியாக மாறிவிட்டது.
குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் ஒவ்வொரு முறையும் பேருந்துகள் உள்ளே வந்து வெளியே செல்லும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. புதிய பேருந்து நிலைய பகுதியை கடந்து செல்லவே வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளன. ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒருமுறையும் புதிய பேருந்து நிலைய பகுதியில் நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யவேண்டும் அல்லது மீண்டும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது.
குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யலாம் என்ற யோசனையும் கூறப்படுகிறது. குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் செயல்பாடும் முன்புபோல் இல்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், நகரின் மையப்பகுதியில் இருக்கும் ஒரே பெரிய மைதானமாக இருப்பதால் அங்கு பேருந்து நிலையம் அமைக்கக்கூடாது என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது. எதிர்கால மக்கள் நலனை கருத்தில்கொண்டு நகராட்சி பள்ளி வளாகத்தில் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய் தால் போக்குவரத்து நெரிசலுக்கு ஓரளவுக்கு தீர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT