Published : 12 Sep 2023 02:40 PM
Last Updated : 12 Sep 2023 02:40 PM
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் ரூ.37.59 கோடியில் நடைபெறும் மழை நீர் வடிகால் பணி அவசர கதியிலும், தரமற்ற வகையிலும் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பணியை ஆய்வு செய்ய பொறியாளர் கொண்ட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநிலபேரிடர் நிவாரண நிதியின் கீழ், ரூ.37.59 கோடி மதிப்பீட்டில், 12.461 கி.மீ. நீளத்துக்கு, புதிய மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்பணிகளை அவ்வப்போது தமிழக கேபிள் டிவி நிர்வாக இயக்குநரும், தாம்பரம் மாநகராட்சியின் கண்காணிப்பு அலுவலகமான ஆ.ஜான் லூயிஸ் மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் குழுவினர் அடிக்கடி அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.
ஆனால் அவர்களின் அறிவுறுத்தல்களை பெரும்பாலும் கடைபிடிப்பதில்லை என கூறப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியில், 60 சதவீதம் மட்டுமே முறையாக நடைபெறுகிறது என்றும் புகார்எழுந்துள்ளது.
இதனை கண்காணிக்க வேண்டிய பொறியாளர்கள் சரிவர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது இல்லை என்ற குற்றச்சாட்டை, சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர். இந்த குற்றச்சாட்டை போக்கும் வகையில் தமிழக அரசு, பொறியாளர்கள் கொண்ட ஒரு குழு அமைத்து தற்போது நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அறப்போர் இயக்கம் செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.டேவிட் மனோகர் கூறியது: கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு ஏற்ற வகையில் வாட்டமாக அமைக்கப்படவில்லை. பணி நடைபெறும்போது மாநகராட்சி ஆணையர் மற்றும், சிறப்பு அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது, நீளம் அகலம் சரியாக இருக்கிறதா என்பதனை மட்டுமே ஆய்வு செய்கின்றனர்.
கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டும் போதும், ஜல்லி போடும்போதும் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அதுபோன்ற ஆய்வுகளை பொறியாளர்கள் செய்வதில்லை. இந்த ஆய்வுகளை செய்யாததால் மழைநீர் வடிகால் அமைக்கப்படுவது பயனற்ற ஒன்றாகஉள்ளது. மாநகராட்சி பகுதிகளில் இயற்கையாக உள்ள நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளன. இயற்கையாக உள்ள நீர் வழித்தடங்களை மீட்டு ஆழப்படுத்தி, அகலப்படுத்தினாலே கோடிக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்தலாம். இவர் அவர் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் வி.சரத் லோகநாதன்: அவசர கதியில் பணி மேற்கொண்டு வருகின்றனர். கால்வாய் நீளம், அகலம், எவ்வளவு ஆழத்துக்கு கால்வாய் தோண்ட வேண்டும், எந்தெந்த இடத்தில் எவ்வளவு வாட்டம் இருக்க வேண்டும் போன்ற விவரங்கள் அறிவிப்பு பலகையில் இல்லை.பணிகள் நடைபெறும் போது பொறியாளர் யாரும் சம்பவ இடத்தில் இருப்பதில்லை. சரியாக ஆய்வு செய்யாததால் கட்டுமானம் பயனற்ற நிலை ஏற்படும். எனவே வேறு மாநகராட்சியில் இருந்து ஒரு பொறியாளர்கள் குழுவை அமைத்து ஆய்வுமேற்கொள்ள வேண்டும்.
பணிகள் நடைபெறும் இடத்தில் கவுன்சிலர் தலைமையில் பொதுமக்களை ஒருங்கிணைந்து ஒரு குழுவை அமைத்து பணிகளின் தன்மையை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். வரி வசூல் செய்ய மட்டும் தீவிரம் காட்டும்மாநகராட்சி நிர்வாகம், இதுபோன்ற மக்கள் நலப் பணிகள் குறித்தும் விளக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிமுக பகுதி செயலாளர் சிட்லபாக்கம் இரா.மோகன் கூறியது: தாம்பரம் மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகளை அவசர கதியில் மேற்கொள்வதால் வரும் பருவ மழை காலத்தில் தாம்பரம் பெரும்பிரச்னையை சந்திக்க நேரிடும். மேலும், மழை,வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில், மாநகராட்சி நிர்வாகம் காலம்கடந்து செய்யும் பணிகளால், வீட்டுக்குள்ளேயே மக்கள் முடங்கிப் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பல இடங்களில் கால்வாய் தோண்டுவதாக கூறி, மண் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் மழைநீர் வடிகாலில் இணைக்க, பணம் பெறப்படுகிறது. மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்யும் போது மட்டும் அனைத்து அதிகாரிகளும் பணி நடைபெறும் இடத்துக்கு வந்து பணிகளை செய்வதுபோல் நடிக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி தரப்பில் கூறியதாவது: அனைத்து பணிகளும் முறையாக நடைபெறுகிறது. இதில் முறைகேடுக்கும், குற்றச்சாட்டுக்கும் வழியே இல்லாமல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
ஒப்பந்ததாரருக்கு தினமும் என்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், எவ்வாறு பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து, பொறியாளர்கள் அறிவுறுத்தி அவ்வப்போது பணிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பொறியாளர் பிரிவில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. குறைந்த ஆட்களை வைத்துக்கொண்டு சிறப்பான பணியை மேற்கொண்டு வருகிறோம். மழைநீர் வடிகால் ௮மைக்கும் பணி தரமாகவே நடைபெற்று வருகிறது. உயர் அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
மழைநீர் நேரடியாக குடியிருப்பு பகுதிக்கு செல்லாமல், கால்வாய் மூலம் ஏரிகளுக்கு செல்லும் வகையில் முறையாக மட்டங்கள் பார்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் குற்றச்சாட்டுக்கு வழியே இல்லை. குறைந்த பணியாளர்களைக் கொண்டு தாம்பரம் மக்களுக்கு நிறைவான பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT