Published : 12 Sep 2023 01:35 PM
Last Updated : 12 Sep 2023 01:35 PM

தவறான பேட்டிகளைக் கொடுத்து திமுக அரசைக் கொச்சைப்படுத்த வேண்டாம்: தமிழிசைக்கு ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை

சென்னை: "தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் ஆளுநர் தமிழிசை ஏதாவது ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என்பதற்காக, தன் அரசியல் நிலைப்பாட்டைத் தமிழகத்தில் தக்க வைத்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஆசையை டெல்லி மேலிடத்துக்கு வெளிப்படுத்தும் விதமாக, தவறான பேட்டிகளைக் கொடுத்து, திமுக அரசைக் கொச்சைப்படுத்த வேண்டாம்" என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடி மீது தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை!? தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வம்புக்கு இழுத்து, “பாரதியாருக்கு மரியாதை செலுத்தத் தமிழக முதல்வருக்கு நேரமில்லையா” என்று கேட்டிருக்கிறார்.

அத்தோடு நிற்கவில்லை அவர். “அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் கைகுலுக்கத் தெரிந்த தமிழக முதல்வருக்கு” என்று கூறியிருக்கிறார். தமிழக முதல்வர் கைகுலுக்கிய இடம், ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜகவும், அந்த ஆட்சியின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியும், ஏன், ஒன்றிய அமைச்சர்களும், “சாதனை” என்று பக்கத்துக்குப் பக்கம் - தொலைக்காட்சிக்குத் தொலைக்காட்சி விளம்பரம், பேட்டிகள் வாயிலாகப் பெருமைப்படுத்திக் கொண்ட ஜி-20 மாநாட்டு நிகழ்ச்சியில்தான்.

தமிழிசை ஆளுநர் என்ற முறையில் தன்னை அழைக்காமல் பிரதமர் விட்டுவிட்டாரே என கோபமா? அல்லது ஜி-20 மாநாட்டுக்கு இப்படியொரு விளம்பரத்தைச் செய்தது வருத்தமா? பாரதியாரையும் வம்புக்கு இழுத்து, தமிழகத்தின் முதல்வரையும் வசைபாடியிருக்கிறார்.பாரதியாருக்குப் பெருமை சேர்த்தவர் மறைந்த முதல்வர் கருணாநிதி. அவர் வழியில் நின்று, பாரதியாரைப் பெருமைப்படுத்தும் பல்வேறு பணிகளைத் தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.

பாரதியின் நினைவுநாள், “மகாகவி நாள்"; பாரதி இளங்கவிஞர் விருது வழங்கப்படும் என்று அறிவிப்பு; வாரணாசியில் அவர் வாழ்ந்த வீடு 18 லட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு; அதில் மகாகவி பாரதியாரின் மார்பளவு சிலை வைப்பு; சிறு நூலகம், வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படங்கள்; வரலாற்றுப் படைப்புகள் வைப்பு” என எல்லாவற்றையும் நிறைவேற்றி, மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டைச் சிறப்பாகக் கொண்டாடி, அதற்குச் சிறப்பு நூற்றாண்டு மலர் வெளியிட்டதும் தமிழக முதல்வர்தான் என்பதை தமிழிசைக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஆனால் இவை எதுவுமே தெரியாதது போல், ஒருவேளை அண்டை மாநில ஆளுநராகச் சென்று விட்டதால், தமிழக அரசியல் விவரங்களுடன் தொடர்பு விட்டுப் போனவர் போல் சகோதரி பேசியிருப்பது வேதனைக்குரியது.

அவர் குறிப்பிட்ட பாரதியாரின் நினைவு நாளன்று, தமிழக அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் மரியாதை செலுத்தியிருக்கிறார்கள். அவரது பிறந்தநாளன்று முதல்வரே மரியாதை செலுத்தி, நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

ஆகவே தெலங்கானா மாநில ஆளுநராக இருக்கும் தமிழிசை, தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என்பதற்காக, தன் அரசியல் நிலைப்பாட்டைத் தமிழகத்தில் தக்க வைத்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஆசையை டெல்லி மேலிடத்துக்கு வெளிப்படுத்தும் விதமாக, தவறான பேட்டிகளைக் கொடுத்து, பாரதியாரின் பெருமையை மட்டுமல்ல அனைத்துக் கவிஞர்களின் புகழையும் பரப்பி வரும் திமுக அரசைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தெலங்கானாவிலிருந்து தமிழகம் வந்தவுடன், குறைந்தபட்சம் கடந்தகால பத்திரிக்கைச் செய்திகளைப் படித்து விட்டு திமுக அரசைக் குறைகூறுங்கள். அப்படியும் படிக்க இயலவில்லை என்றால், ஒரு மாநிலத்துக்கு இரு மாநிலம் என்ற நிலையில், ஆளுநர் பொறுப்பை வகிக்கும் சகோதரி தன் அதிகாரிகளிடமாவது, ”அவ்வப்போது தமிழக அரசியல் நிலவரங்களைச் சொல்லுங்கள்” என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, திமுக மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வையுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்", என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x