Published : 12 Sep 2023 08:14 AM
Last Updated : 12 Sep 2023 08:14 AM
திருப்பத்தூர்: நாட்றாம்பள்ளி அருகே பழுதாகி நின்ற சுற்றுலா வேன் மீது பின்னால் வந்த லாரி மோதியதில், ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த ஓணாங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 45 பேர் கடந்த 8-ம் தேதி கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். ஒரு வேனில் 24 பேரும், மற்றொரு வேனில் 21 பேரும் பயணித்தனர்.
பேரணாம்பட்டைச் சேர்ந்த சதீஷ்குமார்(42) ஓட்டிய வேன், திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியை அடுத்த சண்டியூர் என்ற இடத்தில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வந்தபோது முன்சக்கரம் பஞ்சரானது. இதையடுத்து, சென்டர் மீடியன் தடுப்பு கம்பியோரம் வேனை நிறுத்திய ஓட்டுநர் டயரை கழட்டி மாட்டும் பணியில் ஈடுபட்டார். இதனால், வேனில் பயணித்த மீரா(50), தெய்வானை(32), சேட்டம்மாள்(55), தேவகி(50), சாவித்திரி(45), கலாவதி(50), கீதாஞ்சலி(32) ஆகிய 7 பெண்கள் கீழே இறங்கி வேன் பக்கவாட்டில் தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மற்றவர்கள் வேனிலேயே உறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது, சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று, பழுதாகி நின்ற சுற்றுலா வேன் மீது பின்பக்கமாக பயங்கரமாக மோதியது. இதில், வேன் முன்பக்கமாக நகர்ந்து தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த 7 பெண்கள் மீது கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 7 பெண்களும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வேனில் உறங்கிக்கொண்டிருந்த பேரணாம்பட்டு திரு.வி.க. நகரைச் சேர்ந்த சத்யா(33), வைஷ்ணவி(28), ஷியமளா(50), தனஞ்ஜெயன்(50), சண்முகம், பானுமதி, வேன் ஓட்டுநர் சதீஷ்குமார் மற்றும் லாரி ஓட்டுநரான அருணாச்சலம், லாரியில் பயணித்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிவதூரி, ஒடிசாவைச் சேர்ந்தரவி ஆகிய 10 பேர் காயமடைந்தனர்.
அதிகாலை நேரத்தில் நடந்த விபத்து என்பதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்ற சிலர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருப்பத்தூர் கூடுதல் எஸ்.பி. புஷ்பராஜ், வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினர். காயமடைந்தவர்கள் கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துமனைகளில் சேர்க்கப்பட்டனர். வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு 3 உடல்களும், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 4 உடல்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
அமைச்சர் எ.வ.வேலு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
பிரதமர் இரங்கல்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டார்.
முதல்வர் நிவாரணம்: உயிரிழந்த 7 பெண்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.1 லட்சமும், சிகிச்சை பெற்று வரும் 10 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 9 பேரைமாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு சந்தித்து ஆறுதல் கூறினார்.முதல்வர் அறிவித்த தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT