Published : 12 Sep 2023 04:08 AM
Last Updated : 12 Sep 2023 04:08 AM
திருவண்ணாமலை: மேல்மா சிப்காட் அமைக்க 3,174 ஏக்கர் நன்செய் நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷை சந்தித்து மனு கொடுத்து வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையை ஒப்படைக்க சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால், ஆவேசமடைந்த விவசாயிகள் தங்கள் கொண்டு வந்திருந்த விளைபொருட்களை வீசியெறிந்தும், மனுக்களை கிழித் தெறிந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் ‘சிப்காட் 3-வது அலகு விரிவாக்கம்’ செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
‘மேல்மா சிப்காட்’ என்ற பெயரில் மேல்மா, குரும்பூர், காட்டுகுடிசை, நர்மாபள்ளம், நெடுங்கல், தேத்துறை, வட ஆளாய் பிறந்தான், இளநீர் குன்றம், அத்தி, மணிபுரம் மற்றும் வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள 3,174 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலங்களில் நெல், மணிலா, கரும்பு, கேழ்வரகு, பூக்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. தமிழக அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த ஜுலை 2-ம் தேதி முதல் 72 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டங்களை நடத்தியும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த விவ சாயிகள், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையை ஆட்சியர் பா.முருகேஷிடம் ஒப்படைக்க 11 கிராமங்களைச் சேர்ந்த 60 விவசாயிகள், விளை பொருட்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று நண்பகல் 12 மணியளவில் வந்தனர். அப்போது அவர்களை,
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்தர ராஜன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணா துரை தலைமையிலான காவல் துறையினர் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தடுத்து நிறுத்தினர். மேலும், “ஆட்சியரை சந்திக்க உங்கள் (விவசாயிகள்) அனைவரையும் அனுமதிக்க முடியாது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். முக்கியமான 5 நபர்களை மட்டுமே அனுமதிக்க முடியும்” எனக் கூறினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், “எங்களது வாழ் வாதாரத்தை அழித்து ஒழிக்கும் சிப்காட் வேண்டாம் எனக் கூறி மனுக்களை கொடுக்க வந்துள்ளோம். எங்களை அனுமதிப்பதால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் என கூறுகிறீர்கள். நாங்கள் என்ன? கலவரம் செய்யவா? வந்துள்ளோம். முப்போகம் விளையக் கூடிய விவசாய நிலங்களை அழிக்கும் சிப்காட் தேவையில்லை. விவசாய நிலங்கள் இல்லையென்றால், உங்களுக்கும் உணவு கிடைக்காது. ஆட்சியரை சந்திக்க அனைவரையும் அனுமதிக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
அதன்பிறகும், மறுப்பு தெரி வித்த காவல்துறை அதிகாரிகளின் செயலை கண்டித்து, தாங்கள் கொண்டு வந்த விளைபொருட்களை, ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு வீசியும், மனுக்களை கிழித்தெறிந்தும் விவசாயிகள் பிற்பகல் 2.30 மணியளவில் திரும்பி சென்றனர். அப்போது அவர்கள், சிப்காட் விரிவாக்க திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவரும் திரளாக அடுத்த வாரம் வந்து ஆட்சியரை சந்திப் போம் என்றனர்.
இதுகுறித்து சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்க ஒருங் கிணைப்பாளர் அருள் அறுமுகம் கூறும்போது, “சிப்காட் விரிவாக்கம் என்ற பெயரில் அனக்காவூர் ஒன்றியத்தில் முப்போகம் விளையக் கூடிய 3,174 ஏக்கர் நன்செய் விவசாய நிலங்களை கையகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அவர்கள், தரிசு நிலங்கள் என அறிவிப்பு செய்துள்ளனர்.
இது தொடர் பாக ஆட்சியரை கடந் தாண்டு சந்தித்து மனு அளிக்கப் பட்டது. அவர், குழு அமைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதுநாள் வரை குழு அமைக்கவில்லை. விவசாயிகளிடம் கருத்தும் கேட்க வில்லை. அதேநேரத்தில் விவசாய நிலங்களை கையகப் படுத்துவ தற்கான பணியை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தீவிரப்படுத்தியுள்ளனர். இதை எதிர்த்து 72 நாட்களாக தொடர் காத் திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளோம். விவசாயிகளின் போராட் டத்தை மாவட்ட ஆட்சியர் கண்டு கொள்ளவில்லை.
போராட்டத்தை ஒருங்கிணைக் கும் நபர்களுக்கு ஆளுங் கட்சி தரப்பில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தபோது, ஒப்புகை சீட்டுக் கூட தர மறுத்துவிட்டனர். விவசாயிகளை புறக்கணிக்கும் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து, எங்களது வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகிய வற்றை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்துள்ளோம்.
எங்களது கால்நடைகளையும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம். அதன்பிறகு எங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்காவிட்டால், இறுதியாக கருணை கொலைக்கு மனு அளிக்க உள்ளோம். கருணை கொலை செய்துவிட்டால், சிப்காட்டுக்காக நிலங்களை தடையின்றி எடுத்துக் கொள்ளலாம். ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க சென்ற விவசாயிகளை காவல்துறையினர் திட்டமிட்டு தடுத்துவிட்டனர். எத்தனை தடைகளை விதித்தாலும், மேல்மா சிப்காட்டுக்கு ஒருபிடி மண்ணை கூட எடுக்க முடியாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT