Published : 11 Sep 2023 06:37 PM
Last Updated : 11 Sep 2023 06:37 PM
சென்னை: சென்னை பரங்கிமலையில் சீல் வைக்கப்பட்ட வன்னியர் சங்க கட்டிடத்தை இடிக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மாணவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை வரும் செப்டம்பர் 15-ம் தேதி எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பரங்கிமலை பட் சாலையில் உள்ள 41,952 சதுர அடி நிலத்தை, காசி விஸ்வநாதர் தேவஸ்தானம் தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த இடத்தில் வன்னியர் சங்கக் கட்டிடம் கட்டப்பட்டு, செயல்பட்டுவந்தது. சம்பந்தப்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பல்லாவரம் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், அங்கு சென்ற வருவாய்த் துறை அதிகாரிகள் வன்னியர் சங்க கட்டிடத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வன்னியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சுமந்தா காமினி என்பவரிடம் இருந்து இந்த நிலத்தை வாங்கியதாகவும், தற்போது அங்குள்ள கட்டிடத்தில் உயர் கல்வி படிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் விடுதி செயல்பட்டு வருகிறது. எனவே நிலத்தில் இருந்து காலி செய்யும்படி அரசு அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த நிலத்தில் சங்கம் செயல்படுவதில் தலையிடக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வன்னியர் சங்க கட்டிடத்தை இடிக்க இடைக்கால தடை விதித்து, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வன்னியர் சங்கம் தரப்பில், “சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில் மாணவர்களின் சான்றிதழ், லேப்டாப் ஆகியவை சிக்கியுள்ளன. எனவே, அவற்றை எடுத்து, மாணவர்களிடம் திருப்பிக் கொடுக்க அனுமதிக்க வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நிலத்துக்கு உரிமை கோரும் அரசு மற்றும் மனுதாரர் இடையேயான பிரச்சினையில் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது எனக் கூறி மானாவர்களின் உடைமைகளை எடுக்க அனுமதியளித்து உத்தரவிட்டனர்.அதன்படி வரும் வெள்ளிக்கிழமை (செப்.15) மாலை 5 மணிக்கு அந்த இடத்தில் மாணவர்கள் ஆஜராக வேண்டும். அரசு மற்றும் கண்டோன்மென்ட் அதிகாரிகள் ஆஜராகி பூட்டை திறந்து சான்றிதழ்களை எடுக்க அனுமதிக்க வேண்டும்.
மாணவர்களின் சான்றிதழ் உள்ளிட்ட அவர்களது பொருட்களை எடுத்துக்கொண்டு, ஒப்புகை கையெழுத்திட்ட பிறகு, கட்டிடத்தை மீண்டும் பூட்டி சீல் வைக்க வேண்டும். இந்த நடைமுறைள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் விசாரணயை அக்டோபர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், ஏற்கெனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவையும் நீடித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT