Published : 11 Sep 2023 04:50 PM
Last Updated : 11 Sep 2023 04:50 PM
மதுரை: ‘தினமும் 10,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். தெரு நாய்கள் தொல்லையால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளதால் வாரம் இரு முறையாவது வந்து நாய்களை பிடித்து செல்லுங்கள்’ என்று மாநகராட்சிக்கு எழுதிய கடிதத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தெரு நாய்களை பிடிக்க விலங்குகள் நல ஆர்வலர்கள் வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களை குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவிப்பதால் மாநகராட்சியால் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்ய முடியவில்லை. அதனால், மதுரை மாநகராட்சியில் தெரு நாய்கள் எண்ணிக்கை பல மடங்கு பெருகிவிட்டது. சில இடங்களில் கோபக்கார நாய்கள், நோய் தொற்று நாய்கள் குழந்தைகள், பெரியவர்கள், தெருக்களில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு தொல்லை செய்கின்றன. சில நாய்கள் கடித்தும் விடுகின்றன. அதனால், நாய் கடியால் அரசு ராஜாஜி மருத்துவனைக்கு சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு கணக்கெடுப்புபடி மதுரை மாநகராட்சியில் மட்டுமே 47 ஆயிரம் தெரு நாய்கள் இருந்துள்ளன. அதன் பிறகு தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதனால், தெரு நாய்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியிருக்க கூடும் என மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், குடியிருப்புகளை தாண்டி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்திலும் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், அதனை பிடிக்க வேண்டும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் மாநகராட்சி நகர் நல அதிகாரிக்கு கடிதம் எழுதியிருக்கிறது.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: "மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் தினந்தோறும் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் என சுமார் 10,000 பேர் வந்து செல்கின்றனர். மருத்துவமனை வளாகம் மற்றும் வார்டு பகுதிகளிலும் கூட நாய்களின் நட மாட்டம் அதிகமாக உள்ளது. மாநகராட்சியின் சார்பில் வந்து நாய்களை அவ்வப்போது பிடித்து செல்கின்றனர்.
ஆனால், அதே நாய்கள் அடுத்த நாளே இங்கு வந்து விடுகின்றன. அதனால், நோயாளிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஏனவே, நோயாளிகளின் நலன் கருதி வாரம் இரு முறையாவது நாய்களை பிடிக்கும் வண்டி வந்து நாய்களை பிடிக்க உதவுமாறு வேண்டுகிறேன். பிடிக்கப்படும் நாய்கள் மீண்டும் இங்கு வராத வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வன விலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு: தற்போது இந்தக் கடிதம் வெளியானதால், அதற்கு வன விலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வன விலங்கு ஆர்வலர் மாரிக் குமார் கூறுகையில், "மருத்துவமனை வளாகத்தில் ஓரிரு நாய்கள் உள்ளன. உணவுக் கழிவுகள், பயாலஜிக்கல் கழிவுகள் பராமரிப்பதில் மருத்துவமனை நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது. அதனால், வளாகத்தில் ஆங்காங்கே கழிவுகள் உள்ளன.
இதுவெல்லாம் இருக்கிற இடங்களில் தெரு நாய்கள் கண்டிப்பாக வரத்தான் செய்யும். தூய்மைப் பணியை நாய்களை பார்த்து விடும். நாய்கள் மிக அரிதாகவே கடிக்கும். மற்றபடி நட்புடனே பழகக் கூடியவை. கோபக்கரமான நாய்களை பிடிக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக நாய்களே வரக்கூடாது அப்புறப்படுத்த வேண்டும் என்ற சொல்வது தவறான முன் உதாரணம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT