Published : 11 Sep 2023 03:19 PM
Last Updated : 11 Sep 2023 03:19 PM
திருப்பூர்: நாளுக்குநாள் தேய்பிறையாகி வருகிறது ஆவின் பால் விநியோகம். கிராமங்கள் தொடங்கி பெருநகரங்கள் வரை பொதுமக்களுக்கு ஆவின் பால் தட்டுப்பாடு இருந்து வருகிறது. கால்நடை விவசாயிகளிடம் பால் கொள்முதல் தொடர்ந்து இறங்குமுகமாக இருப்பதால், ஆவினை நம்பியுள்ள கால்நடை விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பரமசிவம் கூறியதாவது: ஆவின் பால் விற்பனை சரிந்துள்ளதை மறுக்க முடியாது. அதேபோல் கொள்முதலும் விவசாயிகளிடம் சரிந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஆவின் சார்பில் 600 பால் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இதில் 50 நிலையங்கள் இழுத்து மூடப்பட்டுவிட்டன.
80 சதவீதம் பால் கொள்முதல் நிலையங்களும் நஷ்டத்தில் இயங்குகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் தலைமை அலுவலகமான வீரபாண்டி பிரிவில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உள்ளது. மாவட்டம் முழுவதும் இருந்து 2 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக 1 லட்சத்து 25 ஆயிரம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
பால் உற்பத்தியில் ஈடுபடும் கால்நடை விவசாயிகள் பலர், தனியார் அதிக விலை கொடுப்பதால் அங்கு சென்றுவிட்டனர். ஆவின் மீது கூடுதல் கவனம் செலுத்தி, அதன் விற்பனையை மேம்படுத்த வேண்டும். ஆவின் மட்டும் இல்லையென்றால், விவசாயிகளிடம் கொள்முதல் விலை குறைப்பு தொடங்கி, மனிதர்களின் அன்றாடத் தேவையில் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் பார்க்க தொடங்கிவிடும்.
இன்றைக்கு தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 1 கோடியே 30 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 38 லட்சம் லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்தது. எஞ்சிய பாலை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. அதுவும் சமீபத்தில் 22 லட்சம் லிட்டராக சரிந்துள்ளது.
ஆவினில் லிட்டருக்கு ரூ.30 தொடங்கி ரூ.34 வரையும், தனியாரில் ரூ.40 முதல் ரூ.50 வரையும் கொள்முதல் செய்யப்படுகிறது. வறட்சி, தீவன விலை உள்ளிட்டவற்றால் கால்நடை விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன், தொலை நோக்கு பார்வையோடு அணுகினால் மட்டுமே அழிந்து வரும் ஆவினை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட கால்நடை விவசாயி பாலசுப்பிரமணியம் கூறும்போது, ‘‘70 கிலோ கொண்ட கால்நடை கலப்புத் தீவனம் ரூ.1750-ல் இருந்து, ரூ.2050 ஆக உயர்ந்துள்ளது. 50 கிலோ தவிடு ரூ.600-ல் இருந்து ரூ.800 ஆகவும், 50 கிலோ பருத்தி மூட்டை ரூ.1200-ல் இருந்து ரூ.1800 ஆகவும், வைக்கோல் ஒரு கட்டு ரூ.30-ல் இருந்து ரூ.60 ஆகவும் உயர்ந்துள்ளன.
ஆவினில் தீவன உற்பத்தி உள்ளது. அதனை இன்னும் விரிவுபடுத்தி, மானிய விலையில் கால்நடை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கொள்முதல் விலையை உயர்த்தி, கால்நடை விவசாயிகளை காப்பாற்றுவதுடன், ஆவினையும் காப்பாற்ற வேண்டும். லிட்டருக்கு ரூ.3 குறைப்பால், ஆவின் ஒன்றியங்களுக்கு வந்து சேரவேண்டிய ரூ.250 கோடி நிதியை அரசு விடுவித்து, ஆவின் ஒன்றியங்கள் நஷ்டத்தை தவிர்க்க வேண்டும்.
கால் நடை விவசாயிகள், ஆவின் பணியாளர்கள், அரசு மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பு அடங்கிய கூட்டுக் கமிட்டி அமைத்து பேச்சுவார்த்தை மூலம் சீரான வளர்ச்சியை கொண்டு சென்றால் மட்டுமே, ஆவின் தப்பிக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT