Last Updated : 11 Sep, 2023 03:04 PM

 

Published : 11 Sep 2023 03:04 PM
Last Updated : 11 Sep 2023 03:04 PM

கோவையில் எங்கு சென்றாலும் டேக் டைவர்ஷன்! - மக்கள் அவதி

படங்கள்: ஜெ.மனோகரன்

கோவை: கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர், சாக்கடை கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மிகுந்த காலதாமதமாக மேற்கொள்ளப்படுவதும், பணிகள் முடிந்த சில நாட்களில் மீண்டும் மீண்டும் சாலைகள் தோண்டப்படுவதும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விரிவுபடுத்தப்பட்ட கோவை மாநகராட்சி தற்போது 100 வார்டுகளை கொண்டுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர், சாக்கடை கால்வாய், காஸ் பைப் லைன், பாலம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. ஆமை வேகத்தில் பணிகள் மேற்கொள்ளப் படுவதால் நகரின் மையப் பகுதிகள் கூட மிகவும் மோசமான நிலையில் காட்சியளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பீளமேடு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் கூறும்போது, “வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் சாலைகள் தோண்டப்படுகின்றன. ஆனால் பணிகள் நிறைவடைய பல மாதங்களாகின்றன. இதனால் பல இடங்களில் ‘டேக் டைவர்சன்’ என்ற பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதை காணும் போது நடிகர் விவேக்கின் திரைப்பட நகைச்சுவை காட்சிதான் நினைவுக்கு வருகிறது.

பணிகள் முடிவடைந்த இடங்களில் குடிநீர் கசிவு காரணமாக மீண்டும் மீண்டும் சாலைகள் தோண்டப்படுகின்றன. சாலைகளை தோண்டும் போது காட்டும் ஆர்வத்தை பணிகள் முடிந்த பின் சீரமைப்பதில் காட்டுவதில்லை. ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரை மட்டும் கொண்டிருந்தால் போதாது, அதற்கேற்ப நகரம் காட்சியளிக்க வேண்டியது அவசியம்” என்றார்.

சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயமுத்தூர் அமைப்பின் தலைவர் ஜெயராமன் கூறும்போது, “நஞ்சுண்டாபுரம் சாலையில் இருந்து ராமநாதபுரம் 80 அடி சாலையில் வளர்ச்சி பணிகளுக்காக குழி தோண்டப்பட்ட நிலையில் பணிகள் ஆமை வேகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. ஒலம்பஸ் அருகே திருச்சி சாலையின் ஒரு பகுதி முற்றிலும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்காக சாலை குறுகி காணப்படும் நிலையில் அதிலும் ஒரு பகுதி அடைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். விளாங்குறிச்சி சாலையில் குடிநீர் கசிவுக்காக தோண்டப்பட்ட புதிய தார் சாலை, பணிகள் முடிந்த பின்பும் சீரமைக்கப்படாததால் பெரிய பள்ளம் ஏற்பட்டு வாகன விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.

மீண்டும் மீண்டும் சாலை தோண்டப்படுவதற்கு விளாங்குறிச்சி சாலையே சிறந்த உதாரணம். வினோபாஜி நகர் அருகே குடிநீர் குழாய் கசிவு சரிசெய்யப்பட்ட நிலையில், தண்ணீர் பந்தல் எஸ் பெண்ட் பகுதியிலும் கசிவு ஏற்பட்டு சீரமைக்கப்பட்டது. தற்போது குமுதம் நகர் அருகே குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. தரமான முறையில் பணிகள் மேற்கொண்டால் இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்கலாம். வளர்ச்சி பணிகளுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சரியான திட்டமிடலுடன் பணிகள் மேற்கொள்வது மட்டுமே இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x