Published : 11 Sep 2023 06:43 AM
Last Updated : 11 Sep 2023 06:43 AM
சென்னை: அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை வரும் 30-ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அசுத்தமான நீரை அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஒருவர் உயிரிழக்கவும் நேரிட்டது. கடந்த ஆண்டு ஜல் ஜீவன்திட்டத்தின்கீழ் 60 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு குழாய்களை அமைத்து, நாட்டிலேயே தமிழகம் சிறப்பாக செயல்பட்டதுஎன மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. அத்தகைய நம் மாநிலத்தில், மாசுபாடான நீரை அருந்தியதால் மக்கள் பாதிக்கப்படுவது குறித்தசெய்திகள் வருவது வருந்தத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைவருக்கும் பாதுகாப்பானகுடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும், தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த, நீர்க்கசிவு உள்ள குழாய்களை அடையாளம் கண்டு சரிசெய்ய வேண்டும். மேல்நிலை தொட்டிகள், நீர்த்தேக்கங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். குடிநீர் குழாய்கள், தொட்டிகள், தரைமட்ட நீர்த்தேக்கங்களில் நீர்மாசுபாடு அடைவதற்கான காரணங்களை கண்டறிந்து, அதை சரிசெய்யவேண்டும். நீர் மாசுபாடு தொடர்பானஅபாயங்களை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேல்நிலை தொட்டிகள், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் தேக்கப்பட்டுள்ள நீரில் தேவையான அளவில் பிளீச்சிங் பவுடர்கலந்து, நீரை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நீரை சுத்தப்படுத்த போதுமான அளவுக்கு நீரில்குளோரின் பொடி கலப்பதை உறுதிப்படுத்த வேண்டும். குடிக்க விநியோகிக்கும் நீரில் கிருமிகள் கலக்காத வகையில் நீரை பாதுகாப்பாக வைக்க வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளுடன் ஒருங்கிணைந்து அதிக அளவில் நீர் மாதிரிகளை சேகரித்து, நீரின் தரத்தை பரிசோதிக்க வேண்டும்.
குடிநீரின் தரம் தொடர்பான பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்கும்வகையில் வலுவான குறைதீர்வு அமைப்பை நிறுவ வேண்டும். ‘குடிநீர் பிரச்சினை குறித்து புகார் கொடுத்தால் சரியான நேரத்தில் தீர்க்கப்படும்’ என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இவை அனைத்தையும் வரும் 30-ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும்.
இதுதொடர்பான முன்னேற்றத்தையும், ஆக்கப்பூர்வமான விளைவுகளையும் கண்காணிக்க ஏதுவாக,நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறையின் செயலர்களுக்கு விரிவான அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT