Published : 11 Sep 2023 04:00 AM
Last Updated : 11 Sep 2023 04:00 AM
உடுமலை: உடுமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் வேளாண், தோட்டக்கலை துறை சார்பில் நூறு சதவீத மானியத்தில் அமல்படுத்தப்படும் சொட்டு நீர் பாசன திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்று வட்டாரத்தில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பில் தென்னை, வாழை, மா, பாக்கு உள்ளிட்ட மர பயிர்களும், மக்காச்சோளம், சோளம், கம்பு, உளுந்து, கொள்ளு உள்ளிட்ட பயறுவகை பயிர்களும், நிலக் கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வித்து பயிர்கள், தக்காளி, கத்தரி, வெண்டை, பீட்ரூட், மிளகாய்,வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள்மற்றும் கீரை வகைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
விவசாயத்தை சார்ந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயக் கூலி தொழிலாளர்களும் வசிக்கின்றனர். இந்நிலையில் வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறைகள் சார்பில் விவசாயிகளுக்கு விதைகள் விநியோகம், உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருள் உதவி, நோய் மேலாண்மை, சொட்டுநீர் பாசனம், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு உதவிகள், வழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகின்றன.
சிறுகுறு விவசாயிகளுக்கு முழு மானியம் அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் அறிவிப்புக்கு ஏற்றபடி இல்லாமல், அரசால் அங்கீகரிக்கப் பட்ட முகமைகள், பல்வேறு காரணங்களைக் கூறி விவசாயிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், போதிய விழிப்புணர்வு இல்லாத சிறுகுறு விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து உடுமலை விவசாயிகள் கூறியதாவது: மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த சிறு விவசாயி ஒருவர், தனது ஓர் ஏக்கர் நிலத்தில், கடந்த 2021–ம் ஆண்டுவேளாண் துறை மூலம் ஆழ்குழாய் அமைக்க மானியஉதவி கேட்டு விண்ணப்பித்தார். சொந்த செலவில் ஆழ்குழாய் அமைத்த பின்னர், அத்திட்டத்தின் படி மானிய உதவிகிடைக்கவில்லை. மானியம் பெற வேண்டும் எனில் சொட்டு நீர் பாசனம் அமைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறு குறு விவசாயிகளுக்கு 100சதவீதம் மானிய திட்டம் இருப்பதை அறிந்து அதன் மூலம் விண்ணப்பித்துள்ளார். அதன் பின் வேளாண் துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் முகவர் மூலம் சொட்டுநீர் அமைக்கும் பணிகள் தொடங்கியபோது, விவசாயி தனது பங்களிப்பாக ரூ.40,000 செலுத்த வேண்டும்.
அரசு அளிக்கும் உபகரணங்கள் போதாது என்பதால், இத்தொகையை செலுத்தினால் மட்டுமே சொட்டுநீர்அமைக்கப்படும் என முகவர் வலியுறுத்தினார். வேறு வழியின்றி குறிப்பிட்ட தொகையை செலுத்தி, சொட்டுநீர் பாசனமும் அமைக்கப்பட்டது. ஆனால் ஆழ்குழாய் அமைத்ததற்கான மானியம் இன்னும் வழங்கப்படவில்லை. இதுபோல பரவலாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், என்றனர்.
இது குறித்து வேளாண் அலுவலர்கள் கூறியதாவது: சொட்டுநீர் பாசனம் அமைக்கும் திட்டத்துக்காக சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானிய உதவியை அரசு அளிக்கிறது. இதில், ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முன் மாதிரி விலைப் பட்டியலும் அதன் மூலம் பெறலாம்.
சில இடங்களில் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப சொட்டு நீர் உபகரணங்கள் கூடுதலாக தேவைப்படும். அதற்குரிய தொகையை விவசாயி கொடுக்க வேண்டும். அனைத்து செயல்பாடுகளும் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். மேற்படி பாதிக்கப்பட்ட விவசாயிக்கு சொட்டு நீர் அமைத்த தனியார் நிறுவனத்தின் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. எனினும் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய மானிய தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT