Published : 10 Sep 2023 05:24 PM
Last Updated : 10 Sep 2023 05:24 PM
அரூர்: தமிழகத்தில் கஞ்சா விற்பனை உச்சத்தில் உள்ளது; இதனைத் தடுக்க முதல்வர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் கடத்துாரில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''ஒகேனக்கல் உபரி நீர்த்திட்டத்தைத நிறைவேற்ற வேண்டும் என்பது தருமபுரி மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கை. இதற்காக 10 லட்சம் மக்களிடம் கையெழுத்து பெற்று கடந்த ஆட்சியில் முதல்வரிடம் கொடுத்தோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தருமபுரி மாவட்டத்தின் அனைத்து வளர்ச்சிக்கும் ஒரு தீர்வாக இத்திட்டம் இருக்கும். காவிரியில் ஆண்டுதோறும் வீணாக 100 டி.எம்.சி நீர் கடலில் கலந்து வீணாகி வருகின்றது. இத்திட்டத்திற்கு நமக்கு தேவை 3 டி.எம்.சி.மட்டுமே. இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் அமைக்க வேண்டும். 5 லட்சம் இளைஞர்கள் வெளி மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் சென்று பணியாற்றி வருவதை தடுக்க தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதைபணிக்காக 100 கோடி ஒதுக்கி பணிகள் நடந்து வருகின்றது. இதனை வேகமாக செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம். தருமபுரி மாவட்டத்தில் உள்ள தும்பலஅள்ளி கால்வாய் திட்டம், பொதியன் பள்ளம், ஆணை மடுவு நீர்த்தேக்கத் திட்டப்பணிகள், வாணியாறு கால்வாய் நீட்டிப்பு,வள்ளி மதுரை அணை உயர்த்தி அமைக்க வேண்டும் தென்பெண்ணையாறில் வீணாகும் நீரை தடுப்பணை கட்டி நீரேற்றம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட நீர்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
ஒவ்வொரு ஒன்றியத்திலும் குளிர்ப்பதன கிடங்குகள் அமைத்திட வேண்டும்.தக்காளி,பட்டு, புளி, மரவள்ளி உள்ளிட்ட விவசாய விளைப்பொருட்களுக்கு அடிப்படை விலை நிர்ணயிக்க வேண்டும். காவிரி நடுவர் மன்றம் ஆணையின் படி நேற்று வரை தமிழகத்திற்கு 60 டிஎம்சி நீர் விட்டிருக்கவேண்டும் ஆனால் கர்நாடக அரசு வெறும் 7 டிஎம்சி தான் கொடுத்துள்ளது. டெல்டாவில் குறுவை சாகுபடியின் போது 5 .25 லட்சம் ஏக்கர் பயிரிடப்படும். இதில் தற்போது 3 லட்சம் ஏக்கர் அறுவடை முடிந்துவிட்ட நிலையில் நீரில்லாததால் 2 லட்சம் ஏக்கர் பயிர் காய்ந்து வருகின்றது. காவிரி மேலாண்மை ஆணையத்திடம் அனைத்து அணைகளையும் ஒப்படைக்க வேண்டும். அணை நிர்வாகத்தை ஆணையமே செயல்படுத்திட அதிகாரம் வழங்கிட வேண்டும்.
பாசனத்திற்கு மட்டுமின்றி , 22 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளதால் கர்நாடக மாநில முதல்வரை தமிழக முதல்வர் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். நெல்லுக்கு கூடுதல் விலை வழங்கவேண்டு்ம். குவிண்டாலுக்கு தமிழக அரசு ஆதார விலையை குறைந்தது ரூ.500 உயர்த்தி, நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,700 வழங்கிடவேண்டும். மேட்டுர் அணையை துார் வாரிட வேண்டும், அத்துடன் ஆழப்படுத்திடவும் வேண்டும், இதன் மூலம் மேலும் 20 டிஎம்சி கூடுதலாக சேமிக்க முடியும். கூட்டணி குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. பாமக கடந்த 6 மாதத்திற்கு முன்பே தேர்தல் பணிகள் தொடங்கி விட்டோம். ஜி -20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய பிரதமருக்கு பாமக சார்பில் பாராட்டும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. அதிலும் கஞ்சா விற்பனை உச்சத்தில் உள்ளது. அதிகஅளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்க முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கம்பைநல்லுார் பகுதிகளில் மக்களுக்கு பெரும் அவதியாக டாஸ்மாக் உள்ளது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் இல்வாவிடில் கடும் போராட்டம் நடத்தப் படும் என்றார்.
பேட்டியின் போது பாமக மாவட்ட செயலாளர்கள் ,வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ,அரசாங்கம், முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி, சதாசிவம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT