Last Updated : 10 Sep, 2023 04:58 PM

 

Published : 10 Sep 2023 04:58 PM
Last Updated : 10 Sep 2023 04:58 PM

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி கூடுகிறது

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி கூடுகிறது என்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி சட்டப்பேரவை 15-வது கூட்டத்தொடர் வருகின்ற 20-ம் தேதி காலை 9.30 மணி அளவில் கூட்டப்படுகிறது. சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.

கடந்த மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு, மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இது இந்த ஆண்டில் இரண்டாவது கூட்டத் தொடராகும். புதுச்சேரி சட்டப்பேரவைக்கு கையகப்படுத்திய நிலத்தை திரும்ப வழங்கியதில் கையூட்டு பெறப்பட்டதாக நான் கூறியதற்கு வைத்திலிங்கம் எம்.பி மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

நான் ஆதாரத்தை காட்டுகிறேன். சட்டப்பேரவை வளாகம் கட்ட கையகப்படுத்தப்பட்ட நிலம், அப்போதைய ஆளுநரால் திரும்பப் பெறப்பட்டு சென்னை உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என 2008-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. 2009-ம் ஆண்டு சட்டப்பேரவை தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் அதற்கான உத்தரவை பிறப்பித்தபோது, முதல்வராக இருந்த வைத்திலிங்கம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அந்த நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காமல், 2018-ம் ஆண்டு ஒப்படைத்ததன் காரணம் என்ன? இதுசம்மந்தமாக அவர் விருப்பப்பட்டால், சிபிஐ விசாரணைக்கும் தயாராக உள்ளேன். இதற்கு அவர் பதில் கூறட்டும். 10 ஆண்டுகள் இழுத்தடித்த மர்மம் என்ன? அதில் தரப்பட்ட கையூட்டு என்ன? வைத்திலிங்கம் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

2014- ம் ஆண்டு எனது தொகுதியில் பூரணாங்குப்பம் முதல் புதுகுப்பம் வரை புதைவட மின்கேபிள் புதைப்பதற்காக டெண்டர் ரூ.11 கோடிக்கு விடப்பட்டது. ஆனால் ரூ.2 கோடி கூட பணி நடைபெறவில்லை. இதேபோல் காலாப்பட்டு தொகுதியில் கடலோர கிராமங்களில் புதைவட கேபிள் போட ரூ.23 கோடியில் ரூ.2 கோடி கூட செலவு செய்யவில்லை.

இதற்கும் சிபிஐ விசாரணை வைக்க வேண்டும். சிபிஐக்கு பரிந்துரை செய்ய நான் தயாராக உள்ளேன். 2 முறை இதுகுறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியும், எந்த அதிகாரியும் விளக்கம் அளிக்கவில்லை. அரசு விழாக்களிலும் எதிர்கட்சி எம்எல்ஏக்களை மதித்து அழைக்கிறோம். ஒரு சில இடங்களில் தவறு நடந்திருந்தது. ஆனால் அது தற்போது சரி செய்யப்பட்டுவிட்டது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு கொடுக்க முடியாது என முன்னாள் முதல்வர் நாராயணசாமியும், எதிர்கட்சி தலைவரும் கூறியிருந்தனர். ஆனால் தற்போது அதனை நாங்கள் பெற்றுத் தந்திருக்கிறோம். இதற்கு மத்திய அரசுக்கும், ஆளுநருக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். இன்னும் 2 நாட்களில் கியாஸ் மானியம் வழங்கப்படும். அதிகாரிகள் செய்த சிறு பிழை காரணமாக மானியம் தடைப்பட்டுள்ளது. 2 நாளில் சரி செய்து வழங்கப்படும். இன்னும் 1 மாதத்தில் புதிய சட்டப்பேரவை கட்ட டெண்டர் வைக்கப்படும். டிசம்பர் மாதம் பிரதமர் மோடி பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைப்பார். 2 ஆண்டுகளில் புதிய சட்டபேரவை கட்டி முடிக்கப்பட்டு, முதல்வர் ரங்கசாமியால் திறந்து வைக்கப்படும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x