Published : 10 Sep 2023 04:42 PM
Last Updated : 10 Sep 2023 04:42 PM
மேட்டூர்: மேட்டூர் உபரிநீர் திட்டப்பணிகள் டிசம்பர் மாத இறுதிக்குள் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது, என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேட்டூர் அணை உபரிநீரைக் கொண்டு, சரபங்கா வடி நிலக்கோட்டத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளை நிரப்பும் வகையில் ரூ.565 கோடியில் 2020ம் ஆண்டு பிப்ரவரியில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. இத்திட்டம் நிறைவேறும் போது, நங்கவள்ளி, வனவாசி, மேச்சேரி, தாரமங்கலம், எடப்பாடி, சங்ககிரி, கொங்கணாபுரம் பகுதிகளில் 4,238 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அணையில் இருந்து 0.60 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். இதற்காக திப்பம்பட்டி, வெள்ளாளபுரம், கன்னந்தேரி உள்ளிட்ட பகுதிகளில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிரம்பிய போது, உபரிநீர் திட்டத்தில் முதல்கட்டமாக பணிகள் முடிவுற்ற ஏரிகளுக்கு திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து நீர் கொண்டு செல்லப்பட்டு 4 ஏரிகள் நிரம்பின.
இந்நிலையில், திட்டப்பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளதால், மீதமுள்ள ஏரிகளுக்கு உபரிநீரை வழங்க முடியாத நிலையுள்ளது. குறிப்பாக, உபரி நீர் கொண்டு செல்லும் பகுதியான விருதாசம்பட்டியில் உபரிநீர் திட்டத்துக்கான பைப் லைன் அமைக்க நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி கால தாமதமானது.
தற்போது விருதாசம்பட்டியில் பணி தொடங்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் பைப்லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, பாப்பம்பாடி, ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலத்தில் பைப்லைன், திறந்தவெளி கால்வாய் அமைக்க நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மேட்டூர் உபரி நீர் திட்டப் பணிகள் 3 ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, தொடர்ந்து உபரி நீர் திட்டப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த, மின்சாரம் உள்ளிட்டவற்றுக்கு கூடுதலாக ரூ.108 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, ரூ.673.88 கோடியில் உபரி நீர் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
இது தொடர்பாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மேட்டூர் அணை உபரி நீர் திட்டப்பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மின் இணைப்பு, உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் வெள்ளாளபுரம், கன்னந்தேரி துணை நீரேற்று நிலையங்களில் இறுதிக் கட்டப் பணி நடைபெறுகிறது. இத்திட்டத்தில் செக்கான் ஏரி, பி.என்.பட்டி ஏரி, கொத்திக் குட்டை ஏரி ஆகிய 3 ஏரிகள் இணைக்கப்பட்டுள்ளன.
தற்போது, 93 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. ஒட்டு மொத்தமாக 34 கிமீ தூரம் குழாய் பதிக்கும் பணியில் 32.5 கிமீ தூரம் பணிகள் நிறைவடைந்துள்ளன. விருதாசம்பட்டியில் பணி முடிந்தால், நங்கவள்ளி ஏரியில் இருந்து தொடர்ச்சியாக 30 ஏரிகளுக்கு நீர் வழங்க முடியும். பாப்பம்பாடி என்ற பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பைப்லைன் அமைக்க வேண்டியுள்ளது.
கட்டாய நில எடுப்புச் சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. டிசம்பர் மாதத்துக்குள் திட்டப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், ஒட்டு மொத்த ஏரிகளுக்கும் உபரிநீரை வழங்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT