Published : 10 Sep 2023 03:28 PM
Last Updated : 10 Sep 2023 03:28 PM

இந்தியா என்ற பெயரே போதுமானதாகும்; ஒரே நாடு ஒரே தேர்தலை நான் வரவேற்கிறேன்: ராமதாஸ்

ராமதாஸ்

கும்பகோணம்: கவர்ன்மெண்ட் ஆப் பாரத் என்பதை விட இப்போது இருக்கின்ற இந்தியா என்ற பெயரே போதுமானதாகும்; ஒரே நாடு ஒரே தேர்தலை நான் வரவேற்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது, ''காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி பொய்த்துப் போகின்ற நிலைமையை கர்நாடகா அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கர்நாடக மாநிலத்தை ஆளுபவர்களின் மனம் இன்னமும் இலகாமல் உள்ளது. காவிரி நீர் பிரச்சனையில் தமிழக அரசு சரியான வகையில் அனைத்து வகையிலும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு சட்டமும் நமக்கு துணையாக இருக்க வேண்டும். இந்தியாவிலுள்ள அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று சொல்லி வருகின்றோம். இந்த மக்கள் ஒற்றுமையுடன் நீதி பெற்று வாழ சமூக நீதி வேண்டும். அந்த சமூக நீதி தான் அனைவருக்குமான பரிகாரமாகும்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக செயற்குழு, பொதுக்குழு கூடிய பின்னர் முடிவெடுத்து அறிவிப்போம். இதே போல் இந்த மயிலாடுதுறை தொகுதி மட்டுமில்லாமல், தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளையும் நாங்கள் கைப்பற்றுவதற்கான வாய்ப்புண்டு. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதில் காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஜி-20 மாநாடு தொடர்பாக அதிபர்களுக்கு அனுப்பிய அழைப்பிதழிலில் அச்சிட்டுள்ள கவர்ன்மெண்ட் ஆப் பாரத் என்பதை விட இப்போது இருக்கின்ற இந்தியா என்ற பெயரே போதுமானதாகும். இந்தியா என்பது ஒரே நாடாகும். நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடப்பது நல்லது, அதனால் ஒரே நாடு ஒரே தேர்தலை நான் வரவேற்கிறேன்'' எனத் தெரிவித்தார்.

பின்னர், அவரிடம், ஸ்டாலின் அழைத்தால் வரமுடியாமல் இருக்க முடியுமா, தட்ட முடியுமா என்று நிகழ்ச்சியில் பேசியுள்ளீர்கள், அதனால் நீங்கள் சொன்னது மு.க.ஸ்டாலினையா அல்லது ம.க.ஸ்டாலினையா என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராமதாஸ், ''ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலினை தான் சொன்னேன், நீங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள்'' என சிரித்தபடி பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x