Published : 10 Sep 2023 01:21 PM
Last Updated : 10 Sep 2023 01:21 PM
சென்னை: சென்னை அருகே மதுரவாயலில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது சிறுவன் உயரிழந்துள்ளார்.
சென்னை மதுரவாயல், பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த அய்யனார் சோனியாவுக்கு 4 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில், 4 வயது குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு லேசானா காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து சிறுவனுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர்.
சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்படவே, சிறுவனை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது பெற்றோர் அனுமதித்துள்ளனர். கடந்த செப்டம் 6 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது. மேலும், சிறுவனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் நேற்று இரவு உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, சிறுவனின் உயிரிழப்பைத் தொடர்ந்து, மதுரவாயல் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி, மதுரவாயல் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், மதுரவாயல் பகுதியில் நிலவும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கே டெங்கு காய்ச்சல் பரவ காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள், அந்தப் பகுதியில் விழிப்புணர்வு நோட்டீஸ்களை ஒட்டிச் சென்றனர். வளசரவாக்கம் மண்டல அலுவலர் மற்றும் போலீஸார் உள்ளிட்டோர் உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, சுகாதார சீர்கேடுகளைத் தடுக்க தவறிய மாநகராட்சி மற்றும் அப்பகுதி கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிறுவனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT