Published : 30 Jul 2014 12:00 AM
Last Updated : 30 Jul 2014 12:00 AM
சென்னை சுங்கத் துறை அலுவலகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. இதனால்,வர்த்தகர்கள் வேறு துறைமுகங் களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து உணவுப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், பளிங்குகற்கள், கனிமப் பொருட்கள் உள்பட ஏராளமான பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து ஸ்டீல், கார் உதிரிபாகங்கள், நியூஸ் பிரிண்ட் உட்பட பல்வேறு விதமான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இப்பொருட்கள் கப்பல் மற்றும் சரக்கு விமானங்கள் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகின்றன.
இவ்வாறு பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு சுங்கத் துறையின் அனுமதி பெற வேண்டும். ஆனால், சுங்கத் துறையில் போதிய ஊழியர்கள் இல்லாததால் அண்மைக்காலமாக பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வது தாமதமாகிறது. இதனால், வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை சுங்கத் துறை ஏஜென்ட் அசோசியேஷன் தலைவர் கிருஷ்ணன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: எங்கள் அசோசியே ஷனில் 900க்கும் மேற்பட்ட ஏஜென்ட்டுகள் உறுப்பினர்களாக உள்ள னர். இவர்கள் தங்களது வாடிக்கை யாளர்களின் பொருட்களை ஏற்று மதி, இறக்குமதி செய்வதற்கு உதவி புரிந்து வருகின்றனர். வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு சுங்கத் துறை அனுமதி பெற வேண்டியது அவசியம். ஆனால், சுங்கத் துறையில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான ஆவணங்களை பரிசீலனை செய்து அனுமதி வழங்க தாமதமாகிறது.
நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் ஆவணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நாள் ஒன்றுக்கு 800 ஆவணங்களுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்படுகிறது.
சுங்கத் துறை அதிகாரிகள் ஏஜென்ட்டுகளுக்கு உதவி செய்யும் நோக்கில், ஆள் நெருக்கடியான நேரத்திலும் விரைந்து ஆவணங்களை பரிசீலனை செய்து அனுமதி வழங்கி வந்தனர்.
அண்மையில் சி.பி.ஐ., அதிகாரிகள் நான்கு சுங்கத் துறை அதிகாரிகள் மீது சில புகார்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால், அவர்கள் மனரீதியாக பாதிப்படைந்துள்ளனர். இதன் காரணமாக, அவர்கள் மிக தாமதமாக ஆவணங்களை பரிசீலனை செய்கின்றனர். இதனால், வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. இப்பிரச்சினை குறித்து மத்திய நிதியமைச்ச கத்துக்கும் கடிதம் எழுதியுள்ளோம். ஆனால், இதுவரை அவர்களிடம் இருந்து எங்களுக்கு பதில் வர வில்லை. எனவே, இப்பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கிருஷ்ணன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT