Published : 10 Sep 2023 04:34 AM
Last Updated : 10 Sep 2023 04:34 AM
சென்னை: கட்டணத்தை உயர்த்தியும், மின் வாரியத்துக்கு நஷ்டம் என்றால், மின்சார துறைக்கு வரும் வருவாய் எங்கே போகிறது? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் வரி, பத்திரப்பதிவு கட்டணம் என எல்லாவற்றையும் உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது. கடந்த ஆண்டு அனைத்து நுகர்வோருக்கான மின் கட்டணத்தை 50 சதவீதம் வரை உயர்த்தியது. இதன் விளைவாக, இன்று தமிழகம் முழுவதும் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருக்கின்றன. பல ஆயிரம் நிறுவனங்கள் முடங்கிவிட்டன. இந்நிலையில், இந்த ஆண்டு ஜூலையில், மின் கட்டணத்தை மீண்டும் 2.4 சதவீதம் திமுக அரசு உயர்த்திருக்கிறது.
இந்த மின் கட்டண உயர்வை எதிர்த்து கோவை, திருப்பூர், ஈரோடுமாவட்டங்களை சேர்ந்த 72 தொழில்அமைப்புகள் ஒன்று சேர்ந்து, செப்.7-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு பரிந்துரையின்படி, சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தியாகும் நேரங்களில், மின் கட்டணத்தை 10 முதல் 20 சதவீதம் குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். கடந்த ஆண்டு கட்டணத்தை உயர்த்தும்போது, மின்சார வாரியத்தின் கடனை அடைக்கவே உயர்த்து வதாகக் கூறினர்.
ஆனாலும், கடந்த 2022-23 நிதியாண்டில் மின் வாரியத்துக்கு ரூ.7,586 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அப்படியெனில் மின் துறைக்கு வரும் வருவாய் எங்கே போகிறது? சிறு, குறு தொழில் துறையினரின் கோரிக்கைகளுக்கு தமிழக பாஜக ஆதரவு அளிக்கும். அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தியாகும் நேரங்களில், மின் கட்டணத்தை 10-20% குறைக்க முன்வர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT