Published : 10 Sep 2023 04:36 AM
Last Updated : 10 Sep 2023 04:36 AM
சென்னை: பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு சேவை நோக்கில் சட்டப் பயிற்சியளிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணைக் குழுக்களின் சார்பில் தன்னார்வ மூத்தவழக்கறிஞர்கள் அமர்வு தொடக்கம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளுக்கான சட்டப் பணிகள் திட்டம், சமூகநலத் திட்டங்களுக்கான சட்ட உதவிகள் குறித்த திரட்டு வெளியீட்டு விழா, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், சட்ட உதவிகள் குறித்த திரட்டை வெளியிட்டுநீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பேசியதாவது: பல்வேறு திட்டங்களில் சென்னைஉயர் நீதிமன்றம் முன்னோடியாக இருப்பதைப்போல, ஒடுக்கப்பட்ட வர்களுக்கு நீதி பெற்றுத்தரும் வகையில் சட்ட உதவி வழங்கமூத்த வழக்கறிஞர்கள் முன்வந்துள்ளது பாராட்டத்தக்கது. நீதி தொடர்பான கருத்து பரிமாற்றத்துக்கு சர்வதேச அளவில் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கும், மற்ற குழந்தைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை களைய இரு பிரிவினரையும் உள்ளடக்கும் வகையில் கல்வி இருக்கவேண்டும். வழக்கறிஞர்கள் வருவாயை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தேவைப்படுவோருக்கு சேவை நோக்கிலும் செய்ய வேண்டும். குறிப்பாக சட்டப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளத் தயங்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை மூத்த வழக்கறிஞர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு சேவை நோக்கில் பயிற்சியளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில், உச்ச நீதிமன்ற நீதிபதிஎம்.எம்.சுந்தரேஷ் பேசும்போது, “எனது அனுபவத்தில் வசதி படைத்தவர்களுக்கானது உச்ச நீதிமன்றம் என்றே நான் உணர்ந்திருக்கிறேன். சட்ட உதவி தேவைப்படுவோரின் வழக்குகளை தாமாக முன்வந்து மூத்த வழக்கறிஞர்கள் கையாளவேண்டும். அனைத்து தரப்பினருக்கும் நீதியை கொண்டு சேர்ப்பதோடு, அரசின் திட்டங்களையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணிகளையும் சட்டப் பணிகள் ஆணைக் குழு செய்ய வேண்டும். குறிப்பாக எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான உதவித் தொகை சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்காபுர்வாலா கூறும்போது, “பல அடுக்கு கொண்ட குடியிருப்பை கட்டும் கொத்தனாரோ, ஊருக்கு உணவளிக்கும் விவசாயியோ, சிறப்பான ஆடைகளை நெய்யும் நெசவாளரோ தங்கள் குடும்பத் தேவைகளை நிறைவேற்ற முடிவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். அப்போதுதான் சமூக புரட்சி ஏற்பட்டுள்ளது என்றும், சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் குறிக்கோள் நிறைவேறியது என்றும் கூற முடியும். அதற்கு கடுமையாக உழைக்கவேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, எம்.தண்டபாணி, மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT