Published : 27 Dec 2017 11:03 AM
Last Updated : 27 Dec 2017 11:03 AM
தி
ட்டமிடல் ஏதுமில்லாமல் சும்மா ஊரைச் சுற்றச் சொன்னால் நமக்கெல்லாம் ரொம்பவே பிடிக்கும். ஆனால், ஐம்பது வயதைக் கடந்த நண்பர்கள் இருவர், சுற்றுச்சூழல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்துடன் 12 ஆயிரம் கிலோ மீட்டருக்கு ஊர்சுற்றி மதுரைக்கு வந்திருக் கிறார்கள்.
காரிலேயே புறப்பட்டு..
மலேசியாவில் வசிக்கும் செல்வகுமார் சண்முகம், பாலன் ஏகாம்பரம் இவர்கள்தான் அந்த நண்பர்கள். கழிவுப் பொருட்களை மறுசூழற்சி செய்வது குறித்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் பிரச்சாரம் செய்வதற்காக மலேசியாவிலிருந்து காரில் புறப்பட்ட இவர்கள், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து, நேபாளம், பூட்டான், மியான்மர் ஆகிய ஆறு நாடுகளைக் கடந்து அண்மையில் மதுரை வந்தனர்.
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர்கள், மலேசியாவில், பிளாஸ்டிக் மற்றும் உலோகக் கழிவுகளை மறு சூழற்சி செய்து பொருட்களை உற்பத்தி செய்யும் கம்பெனியை நடத்துகிறார்கள். அவ்வப்போது சொந்த ஊர் பக்கம் வந்துபோகும் இவர்கள், இந்தமுறை தங்களது சொந்த ஊர் பயணத்தை சற்றே வித்தியாசமாகத் திட்டமிட்டனர்.
6 நாடுகள் 40 நாட்கள்
அதன்படி, மலேசியாவிலிருந்து காரிலேயே தங்களது பயணத்தைத் தொடங்கிய இவர்கள், வழிநெடுகிலும், பிளாஸ்டிக் பொருட்களை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் மறுசுழற்சி செய்து பயன் படுத்தும் விதம் குறித்தும் உலோகக் கழிவுகள் உள்ளிட்ட பிற கழிவுகளையும் மறு சுழற்சி செய்வது குறித்தும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்துகொண்டே வந்தார்கள். இதற்காக 6 நாடுகளில் 40 நாட்கள் சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற் கொண்ட இவர்கள், வழியில் விதவிதமான மக்களையும் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.
அந்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்ட அந்த நண்பர்கள், “மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள்தான் மலேசியாவில், மறு சுழற்சி முறையில் பொருட்களைத் தயாரிக்கும் தொழில்களில் பெரிதும் உள்ளனர். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ரசாயனம், மற்றும் உலோகக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் சேருகின்றன. ஆனால், அவற்றை மறு சுழற்சி செய்வது தொடர்பான விழிப்புணர்வு இங்கில்லை. அதனால்தான் கழிவுகளைக் கண்டபடி வீசுகிறார்கள். இதுபோன்ற கழிவுகளை நிலத்தில் போடுவதால் நிலமும், நீரும் மாசடைந்து சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கின்றன.
விழிப்புணர்வு பிரச்சாரம்
பயணத்தின் வழிநெடுகிலும் நாங்கள் சந்தித்த மக்களிடம் இதையும் பிளாஸ்டிக் கழிவு உள்ளிட்ட கழிவுகளை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவது குறித்தும் தான் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தோம். இந்தப் பயணம் எங்களுக்குப் புதுவிதமான அனுபவத்தைத் தந்திருக்கிறது. இந்தியாவில், மறு சுழற்சி முறையில் பொருட்களை உருவாக்கும் நவீன தொழில்நுட்பங்கள் நடைமுறையில் இல்லை. எனவே, அதை நாங்கள் இங்கு கொண்டு வரலாம் என நினைக்கிறோம்” என்றார்கள்.
தங்களது பயணத்தின் போது மியான்மரில். ஹெச்.ஐ.வி பாதிப்புக்கு உள் ளான குழந்தைகளுக்கான ஆசிரமம், நேபாளத்தின் சில பின் தங்கிய கிராமங்கள், மதுரையில் ஒரு கல்லுாரி, அடையாறு புற்றுநோய் மையம் உள்ளிட்ட இடங்களுக்கு இவர்கள் தங்களால் ஆன நன்கொடை உள்ளிட்ட உதவிகளைச் செய்திருக்கிறார்கள். இவர்களது சீன நண்பர் மைக்கேல் ஷாவும் மலேசியாவிலிருந்து இவர்களோடு கிளம்பினாராம். ஆனால், பல்வேறு வகையான உணவு பழக்கங்களும், தட்பவெப்பமும் மைக்கேல் ஷாவின் உடல்நிலையை வெகுவே பாதித்து விட்டதாம். அதனால், கொல்கத்தாவுடன் அவர் மீண்டும் மலேசியாவுக்கே திரும்பிவிட்டாராம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT