Published : 09 Sep 2023 09:13 PM
Last Updated : 09 Sep 2023 09:13 PM

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையை வலியுறுத்தி சட்டப்பேரவை நோக்கி எஸ்டிபிஐ பேரணி

சென்னை: முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் சட்டப்பேரவை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்தப் பேரணியில் பங்கேற்று பேசிய எஸ்டிபிஐ கட்சியில் மாநில தலைவர் நெல்லை முபாரக், “முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் கோரிக்கை என்பது தமிழக முஸ்லிம்களின் பல்லாண்டு கோரிக்கையாகும். தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக தலைவர்களுடைய பிறந்த நாளின்போது குறிப்பிட்ட வருடங்களை சிறையில் கழித்த ஆயுள் சிறைக் கைதிகளை நன்னடத்தை, பொதுமன்னிப்பின் அடிப்படையில் கருணையோடு விடுதலை செய்வது என்பது வழமையாகி வருகிறது. ஆனால், ஆட்சிகள் மாறிய போதும் காட்சிகள் மாறவில்லை என்பதற்கிணங்க, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை மட்டும் தொடர்ந்து வரும் ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்டு வருகின்றது. அரசின் கருணையில் முஸ்லிம்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படுகின்றது.

தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் தற்போது 37 முஸ்லிம் சிறைக்கைதிகள் 14 ஆண்டுகளை கடந்தும் 28 ஆண்டுகள் வரை சிறைகளில் பல்வேறு அவஸ்தைகளுடன் தங்களின் விடுதலையை எதிர்பார்த்தவர்களாக உள்ளனர். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படியும், அரசியல் சட்டப் பிரிவு 161-ன் படியும் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையை சாத்தியமாக்க முடியும் என்கிற சூழலில், அரசு நிர்ணயித்த அத்தனை தகுதிகளையும் கொண்டவர்களாக முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் இருந்தும், அவர்களின் விடுதலை மட்டும் ஒவ்வொரு முறையும் மறுக்கப்பட்டு வருகின்றது.

இந்த சூழலில் எதிர்வரும் செப்.15 அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் தமிழக அரசை வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், தமிழக அரசு முஸ்லிம் சிறைக் கைதிகள் உள்பட 49 சிறைக் கைதிகளை விடுதலை செய்யும் பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரபூர்வமற்ற தரப்பிலிருந்து செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் இந்த பரிந்துரை வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், ஆளுநர் பக்கம் சிறைவாசிகள் விடுதலையை தள்ளிவிட்டு தமிழக அரசு மவுனமாகி விடக் கூடாது. தமிழக ஆளுநர் எப்படிப்பட்டவர் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும், அதைவிட தமிழக அரசுக்கு நன்றாக தெரியும். ஏற்கனவே, தமிழக அரசின் பல்வேறு கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் மாளிகை கோப்புகளால் நிரம்பி வழியும் நிலையில், சிறைவாசிகளின் பரிந்துரை கோப்பும் ஆளுநர் மாளிகை போய் சேர்ந்துள்ளது. மாநில அரசின் கோரிக்கையை செவிமடுக்காத ஆளுநரின் ஒப்புதலுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் சிறைவாசிகள் காத்துக் கிடப்பது என்கிற கேள்வி எழுகிறது.

ஆகவே, முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்றி, விடுதலை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். ஏனெனில் அமைச்சரவை தீர்மானம் தான் உறுதியான சட்டப்பூர்வ நடவடிக்கையாக இருக்க முடியும். சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற அமைச்சரவைக்கு உரிமை உண்டு என்பதையும், அந்த தீர்மானத்தின் அடிப்படையில் தான் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்பதையும் உச்ச நீதிமன்றம் ஒன்றுக்கு பல முறை அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை சாத்தியமானதும் அமைச்சரவை தீர்மானத்தால் தான். எனவே தமிழக அரசு, இனியும் காலம் தாழ்த்தாமல் வாழ்நாள் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அவர்களை விரைவாக விடுதலை செய்திட வேண்டும். தமிழக முஸ்லிம்களின் பல்லாண்டு கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும் என இந்த பேரணி வாயிலாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x