Published : 09 Sep 2023 08:10 PM
Last Updated : 09 Sep 2023 08:10 PM
மதுரை: “ஹரியாணா, பஞ்சாப், மணிப்பூர், டெல்லியை போல் தமிழக அரசும் தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து தமிழக முதல்வர் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர் சங்கம் சார்பில் தொகுப்பூதிய ஊழியர்களின் கோரிக்கை விளக்க மாநாடு இன்று மதுரையில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் மாநிலத் தலைவர் ஜே.வாலண்றின் பிரிட்டோ தலைமையில் நடைபெற்றது. மாநில துணைச்செயலாளர் ஆர்.துரைப்பாண்டி வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம் துவக்கி வைத்து பேசியது: “தமிழக முதல்வர் சட்டப்பேரவை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஹரியானா, பஞ்சாப், மணிப்பூர், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.
பள்ளிகளில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களையும் பள்ளிக்கல்வித்துறையோடு இணைத்து பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். ஊதிய நிர்ணயம் செய்து குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். காலிப்பணியிடத்தில் விருப்பப்பணி மாறுதல் வழங்கப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வர் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. விரைந்து தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
இக்கூட்டத்தில், தமிழகத்தில் அரசுத் துறைகளிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தினக்கூலி ஊழியர்களை தொகுப்பூதிய ஊழியர்களாக்கவேண்டும். ஊழியர்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் மாநில திட்ட அலுவலர்களின் தனிச்செயலாளர்களை மாற்ற வேண்டும். வருடாந்திர மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தொகுப்பூதியர்களை சேர்க்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT