Published : 08 Sep 2023 03:09 PM
Last Updated : 08 Sep 2023 03:09 PM
சென்னை : சென்னை சூளைமேட்டில் உள்ள கில் நகர் பூங்கா சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சென்னையில் சூளைமேடு பகுதி மக்களுக்காக மாநகராட்சி சார்பில் கில் நகர் பூங்கா அமைக்கப்பட்டு, கடந்த 1998 மே 14-ம் தேதி அப்போது மேயராக இருந்த மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. கில் நகர், பஜனை கோயில், அண்ணா நெடும்பாதை, வடஅகரம் சாலை உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு தலமாக இருந்தது இப்பூங்கா.
இந்நிலையில், உரிய பராமரிப்பு இல்லாததால் கில் நகர் பூங்காவின் சுற்றுச்சுவர் இடிந்தது. நடைபாதை சேதமடைந்தது. விளையாட்டு உபகரணங்களும் அடுத்தடுத்து பழுதடைந்தன. இதனால், பூங்காவை சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, கில் நகர் பூங்காவை சீரமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இப்பூங்காவில் மேயர் பிரியா, அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில், ரூ.40 லட்சம் மதிப்பில், பூங்காவில் பழுதடைந்த நிலையில் உள்ள விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி சாதனங்களை மாற்றி அமைக்கவும், குழந்தைகளுக்கான விளையாட்டு மையம், பெண்களுக்கான உடற்பயிற்சி மையம் ஆகியவற்றை அமைக்கவும் மாநகராட்சி திட்டமிட்டது.
பூங்கா சீரமைப்பு பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இப்பணி காரணமாக, ஏப்ரல், மே மாதங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டு முதல்கட்ட பணிகள் நடைபெற்றன. நடைபாதையில் புதிதாக டைல்ஸ் பதித்தல், சுற்றுச்சுவரை புதுப்பித்தல், செயற்கை நீரூற்று அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையே, மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பூங்கா கடந்த ஜூன் 1-ம் தேதி திறக்கப்பட்டது. ஒருபுறம், சீரமைப்பு பணிகளும் தீவிரமாக நடந்து வந்தன. புதிய நடைபாதையை மக்கள் பயன்படுத்த தொடங்கிய நிலையில் நடைபாதையின் சில டைல்ஸ் கற்கள், சமமாக பதியாததால், பெயர்ந்து உடைந்தன. அவற்றை சரிசெய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பூங்காவில் செயற்கை நீரூற்று, ஒப்பனை அறை, புதிய நடைபாதை, விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் ஆகிய பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இதர சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து இப்பகுதியினர் கூறியதாவது:
சீனிவாசன், ஸ்ரீராமபுரம் முதல் தெரு: கில் நகர் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் சிறப்பாக உள்ளன. இப்பூங்காவில் உடற்பயிற்சி செய்வோர் ஏராளம். அதனால், உடற்பயிற்சி உபகரணங்களின் எண்ணிக்கையை அதிகரித்தால், கூடுதல் பயனாக இருக்கும். அதேநேரம், பூங்கா உபகரணங்களில் சிறு பழுது ஏற்பாட்டாலும், அதை சரிசெய்ய நீண்ட காலம் ஆகிறது. எனவே, பொதுமக்களே இது குறித்து நேரடியாக புகார் அளிக்கும் வசதியை மாநகராட்சி ஏற்படுத்த வேண்டும்.
மூலிகை ஜூஸ் வியாபாரி: நீண்ட காலத்துக்கு பிறகு பூங்கா சீரமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வண்ணமயமான நீரூற்று இப்பகுதிக்கே அழகுசேர்க்கிறது. அதேநேரம், பூங்காவுக்கான வாகன நிறுத்தப் பகுதியில், இருசக்கர வாகனங்களை நிறுத்த வேண்டிய இடத்தில் கார்கள் நாள் முழுவதும் நிற்கின்றன.
இதனால், இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் வாகனத்தை நிறுத்த இடமின்றி சிரமப்படுகின்றனர். இதை முறைப்படுத்த வேண்டும். பூங்காவை ஒட்டிய சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும். பூங்காவின் வெளிப்புறம் உள்ள எலெக்ட்ரானிக் கழிவறை பயன்பாட்டில் இல்லை. அதை அகற்றினால் மேலும் இடவசதி கிடைக்கும்.
கில் நகர் மனோஜ்: தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பூங்கா பொலிவாகஇருப்பது உண்மைதான். ஆனால், முறையாக பராமரிக்காமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். இதனால் மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசுகிறது. மாலையில் கொசு தொல்லை இருப்பதால், அமர்ந்து உடற் பயிற்சிசெய்வோருக்கு தொந்தரவாக உள்ளது.
புதிதாகஅமைக்கப்பட்ட நடைபாதை, சுற்றுச்சுவரும்கூட உரிய தரத்தில்இல்லை.நடைபாதை டைல்ஸ் சீராக பதிக்கப்படாததால், நடந்து செல்வோர் தடுக்கி கீழே விழும் நிலை உள்ளது. இடையூறாக இருக்கும் மரக்கிளைகளை அவ்வப்போது வெட்டி அகற்றுவதும் அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பூங்கா சீரமைப்பு பணிகள் குறித்து அப்பகுதி மாநகராட்சி கவுன்சிலர் சுகன்யா செல்வம் கூறியதாவது: பூங்கா சீரமைப்பு பணிகளை தொடங்கி 3 மாதத்தில் முடிப்பதாகத்தான் திட்டம். ஆனால் பொதுமக்களின் வேண்டு கோளுக்கு இணங்க, பூங்காவை திறந்து வைத்து, அதற்கிடையே சீரமைப்பு பணியை மேற்கொண்டு வருவதால் தாமதம் ஏற்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளன.
அந்த வகையில், ரூ.17 லட்சம் செலவில் புதிய நடைபாதையும், பூங்காவில் சுற்றுச்சுவர் உள்ளிட்ட இடங்களில் வண்ணம் அடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 19 மரங்களை சுற்றி சிறிதாக சுவர் எழுப்பி அழகுபடுத்தப்பட்டுள்ளது. ரூ.14 லட்சத்தில் ஒப்பனை அறை, ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் ரூ.4.50 லட்சத்தில் செயற்கை நீரூற்று, ரூ.6 லட்சத்தில் ஸ்பாஞ்ச் பார்க் எனும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, கவுன்சிலர் நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தில் புதிய விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இத்துடன்ரூ.3.50 லட்சத்தில் நீரூற்றும் சீரமைக்கப்பட்டு வருகிறது. 2 வாரத்தில் இது திறக்கப்படும்.
அதைத் தொடர்ந்து 8 வடிவிலான நடைபயிற்சி கற்கள் அமைத்தல், புல்தரை அமைத்தல், விளையாட்டு, உடற்பயிற்சிக்கான இடங்களில் மணல் பரப்புதல், யோகா பயிற்சி மேடையில் டைல்ஸ் மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் மீதம் உள்ளன. இவையும் ஒரு மாத காலத்துக்குள் முடிவடைந்து, மக்கள் பயன்பாட்டு வந்துவிடும்.
ஆண்டுதோறும் மாநகராட்சி மூலம் வழங்கப்படும் ரூ.40 லட்சம், கவுன்சிலர் நிதியில் இருந்து வழங்கப்படும் ரூ.10 லட்சம் இப்பூங்கா பராமரிப்புக்காக ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மழைநீரை சேமிக்கும் ‘ஸ்பாஞ்ச் பார்க்’ - கில் நகர் பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘ஸ்பாஞ்ச் பார்க்’ எனும் திட்டம், மழை காலங்களில் பெரிதும் உதவக்கூடியது. மழைநீரை சேமிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தொட்டியால், அப்பகுதியில் வீணாகும் மழைநீரை சேமிக்க முடியும்.
அந்த வகையில் சென்னையில் உள்ள 57 மாநகராட்சி பூங்காக்களில் ரூ.6.76 கோடியில் இதுபோல ஸ்பாஞ்ச் பார்க் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT