Published : 08 Sep 2023 04:18 AM
Last Updated : 08 Sep 2023 04:18 AM

தமிழகத்தில் 2 புதிய வகை கரோனா தொற்று கண்டுபிடிப்பு - பொது சுகாதாரத்துறை தகவல்

சென்னை: ஒமைக்ரானின் உட்பிரிவான எக்ஸ்பிபி வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த 2 புதிய கரோனா வைரஸ்கள் தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கரோனா தொற்று, 2020-ம் ஆண்டு இந்தியாவுக்குள்ளும் தடம் பதித்தது. 3 அலைகளாக பரவிய கரோனா வைரஸ், ஆல்பா, டெல்டா வகைக்கு பிறகு, ஒமைக்ரான் தொற்றாக உருமாற்றம் அடைந்தது. இது அதிவேக பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், பல லட்சக்கணக்கான மக்கள் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகினர்.

இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸில் இருந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் எக்ஸ்பிபிஎனும் புதிய வகை வைரஸ் உருவானது. அதுமுதல், ஜனவரி மாதம் வரை இந்த வைரஸ் தொற்றால், 21,979 பேர் பாதிக்கப்பட்டனர். பொது சுகாதாரத்துறை மரபணு பகுப்பாய்வு கூடத்தில், கரோனா உருமாற்றம் தொடர்பான மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

2 புதிய கரோனா உருமாற்றம்: இதில், கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் 2023 ஜனவரி வரை 2,085 பேரின் சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 420 மாதிரிகளில் எக்ஸ்பிபி வகை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் 98 மாதிரிகள் விரிவான நுண் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வில் உலகில் இதுவரை எங்கும் கண்டறியப்படாத, 2 புதிய கரோனா உருமாற்றங்களை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இது தொடர்பான ஆய்வுக் கட்டுரையை பொது சுகாதாரத்துறை சமர்ப்பித்தது. அந்த கட்டுரையை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த லான்செட் இதழ் 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சிவதாஸ் ராஜூ கூறியதாவது:

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் தொற்று: தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியிலும் நடப்பாண்டு தொடக்கத்திலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 81 சதவீதம் பேர் தடுப்பூசிகளை முறையாக செலுத்தியவர்கள். இவர்களில் தீவிர கரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இதில் உலகில் வேறெங்கும் பதிவாகாத2 புதிய வகை வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே, கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகளால் எக்ஸ்பிபி உருமாற்றத்தை தடுக்க முடியாது என்பதை அந்த ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளோம்.

புதிய உருமாற்றங்கள் கண்டறியப்பட்டாலும், தற்போது கரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால் அதுகுறித்த அச்சம் தேவையில்லை. கரோனா போன்ற பிற வைரஸ் தொற்றுகளையும் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அந்த ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x