Published : 08 Sep 2023 05:16 AM
Last Updated : 08 Sep 2023 05:16 AM

ரூ.7.5 லட்சம் கோடி ஊழலை திசை திருப்பவே சனாதன பிரச்சினையை எடுத்துள்ளனர் - பாஜக மீது அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு

சென்னை: மணிப்பூர் கலவரம், ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் ஆகியவற்றை திசை திருப்பவே சனாதனத்தை பாஜகவினர் கையில் எடுத்துள்ளனர் என்று அமைச்சர் உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம் கடந்த 2-ம் தேதி ஏற்பாடு செய்திருந்த ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பங்கேற்றுப் பேசினேன்.

காற்றில் கம்பு சுற்றும் பாஜக: நான் பேசிய பேச்சை, ‘இனப்படுகொலை செய்யத் தூண்டினேன்’ என்று திரித்து, அதையேமக்களிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் ஆயுதமாகக்கருதி, காற்றில் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் பாஜக தலைவர்கள். அமித்ஷா போன்ற மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள் என, யார் யாரோ என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

நியாயமாகப் பார்த்தால், மதிப்புக்குரிய பொறுப்பில் இருந்துகொண்டு அவதூறு பரப்பும் அவர்கள் மீது நான்தான் கிரிமினல் வழக்கு, நீதிமன்ற வழக்குகளைத் தொடர வேண்டும். ஆனால், அவர்களுக்குப் பிழைப்பே இதுதான். அதனால் ‘பிழைத்துப் போகட்டும்’ என்று விட்டுவிட்டேன்.

திமுகவின் 2 கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரிகள் கிடையாது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதைக் கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இவை எதையும் புரிந்துகொள்ள விரும்பாமல், வரும் மக்களவைத் தேர்தலில் வெறும் அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள ‘மோடி அண்டு கோ’வைப் பார்க்கும்போது, ஒருபக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது.

கடந்த 9 ஆண்டுகளாக மோடி சும்மாவே இருந்துள்ளார். இடையிடையே பணத்தை மதிப்பிழக்கச் செய்வது, குடிசைகளை மறைத்து சுவர் எழுப்புவது, புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவது, அங்கு செங்கோல் நடுவது, நாட்டின் பெயரை மாற்றி விளையாடுவது, எல்லையில் நின்றபடி வெள்ளைக் கொடி காண்பிப்பது என நகைச்சுவை செய்துள்ளார்.

‘சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டில் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் தேடிக் கொண்டிருக்கும் பழனிசாமி, கோடநாடு கொலை-கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்ப முயல்கிறார்.அவர் நீண்டநாள் ஒளிந்து கொண்டிருக்க முடியாது.

பிரதமர் மோடி, கரோனா நிதியாகத் திரட்டிய ‘பி.எம்.கேர்ஸ்’க்கு கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றபடி, ரூ.7.5 லட்சம் கோடி என்னவானது என்ற சிஏஜி கேள்விக்கும் பதில் அளிக்காமல், ஊரில் இருந்தால் மணிப்பூர் பற்றிக் கேள்வி கேட்பார்களே என்று பயந்து, நண்பர் அதானியுடன் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

மணிப்பூர் கலவரம், ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் போன்றவற்றை திசை திருப்பத்தான் ‘மோடி அண்டு கோ’ இப்படி சனாதனக் கம்பை சுற்றிக்கொண்டு இருக்கிறது. இவர்களின் கைகளில் மொத்தமாக சிக்கியுள்ளதால், மோடியின் நாடகத்தையே இங்கே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

போராட்டம் வேண்டாம்: ஒரு சாமியார் இடையில் புகுந்து, என் தலைக்கு ரூ.10 கோடி விலை அறிவிக்கிறார். ‘முற்றும் துறந்தவரிடம் எப்படி 10 கோடி’ என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. பலர் என் மீது நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் புகார் அளித்து வருவதாகத் தெரிகிறது. அதேநேரத்தில், அந்த சாமியாரை கைது செய்யக் கோரி, திமுகவினர் பல்வேறு காவல் நிலையங்களிலும் புகார் அளித்து வருவதாகவும், சாமியாரின் உருவ பொம்மையை எரிப்பது, கண்டனச் சுவரொட்டிகள் ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிகிறது. அதுபோன்ற காரியங்களை திமுகவினர் தவிர்க்க வேண்டும். என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை நான் சட்டப்படி எதிர்கொள்வேன். இவ்வாறு அறிக்கையில் உதயநிதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x