Published : 08 Sep 2023 05:29 AM
Last Updated : 08 Sep 2023 05:29 AM

சனாதன தர்மம் குறித்து சர்ச்சை பேச்சு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது ஆளுநரிடம் பாஜக புகார்

சென்னை: சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஆளுநரிடம் தமிழக பாஜக நிர்வாகிகள் நேரில் புகார் மனு அளித்தனர். மேலும், அமைச்சர் சேகர்பாபுவையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு நாடு முழுவதும் பாஜக உள்பட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தமிழக பாஜகமாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், பால் கனகராஜ், மாநில செயலாளர் அஸ்வத்தாமன் மற்றும் தடா பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: சனாதன தர்மத்துக்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு நாடு முழுவதும் சனாதன தர்மத்தை கடைபிடிப்பவர்களின் மனதை புண்படுத்தியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சுக்கு இதுவரை வருத்தமோ, மன்னிப்போ கேட்காமல், பெரியாரின் வழியில், தான் பேசுவதாக வாதிட்டு வருகிறார்.

மதவெறுப்பை தூண்டுபவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என்றுஉச்சநீதிமன்றமும் ஏற்கெனவே கூறிஉள்ளது. எனவே, உச்ச நீதிமன்றவழிகாட்டுதல் படி, உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், தமிழக காவல்துறை எந்தவழக்கையும் பதிவு செய்யவில்லை.

தமிழக முதல்வரின் மகன் என்ற காரணத்தால் அவர் மீது எந்த ஒருநடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, தமிழக காவல்துறைக்கு ஆளுநர் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜகவினர் கொடுத்தமற்றொரு புகார் மனுவில், ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில், சனாதனதர்மத்தை கடைபிடிக்கும் இடமான இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டுள்ளார். தனது பதவி பிரமாணத்தை மீறியதோடு, சனாதன ஒழிப்புக்கான அழைப்புக்கு வாய் மூடி அமைதி காத்திருக்கிறார்.

அமைச்சர் சேகர்பாபுவுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக செப்.11-ம் தேதி தமிழக பாஜக மாநிலம்தழுவிய போராட்டத்தை அறிவித்திருக்கிறது. எனவே, அமைச்சர் சேகர்பாபு, அவரது பதவி பிரமாணத்தை மீறியதற்காக, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சருக்கு கடிதம்: இதேபோல், தமிழக பாஜக முன்னாள் ஊடகப் பிரிவு மாநில தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான ஏ.என்.எஸ்.பிரசாத், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் மனுவை அனுப்பி உள்ளார்.

அதில், ‘சுய விளம்பரத்துக்காகவும், அரசியல் லாபத்துக்காகவும் சனாதன தர்மம் குறித்து எதுவும் தெரியாமல், சாதி, மத வேற்றுமைகளை உண்டாக்க முயலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்க சதி நடந்ததா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x