Published : 07 Sep 2023 04:53 PM
Last Updated : 07 Sep 2023 04:53 PM

“சனாதனம் என்பது கொடிய எச்.ஐ.வி வைரஸ் போன்றது” - ஆ.ராசா பேச்சு

நீலகிரி மாவட்ட திமுக வாக்குச்சாவடிகள் நிலை முகவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய திமுக எம்.பி ஆ.ராசா

உதகை: ‘டெங்கு, மலேரியா, கரோனாவைப் போல சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று’ என உதயநிதி தெரிவித்த கருத்து நாடு முழுவதும் விவாதத்தைக் கிளப்பியிருக்கும் நிலையில், ‘சனாதனம் என்பது கொடிய எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி வைரஸைப் போன்றது’ என நீலகிரி எம்.பியும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா பேசியிருக்கிறார்.

நீலகிரி மாவட்ட திமுக வாக்குச்சாவடிகள் நிலை முகவர்கள் கூட்டம் உதகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்ற இந்தக் கூட்டம், திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ.ராசா தலைமையில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான முகவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் ஆ.ராசா பேசும்போது, “வரும் நாடாளுமன்ற தேர்தல் தேசத்தை காக்க வேண்டிய தேர்தலாகும். தேசத்தை பாதுகாக்கும் பொறுப்பு திமுக தலைவர் தோள் மீது உள்ளது. எனவே, அனைவரும் தேர்தல் பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.

பிரதமர் மோடிக்கு ‘இந்தியா’ என்ற பெயராலேயே பயம் ஏற்பட்டுள்ளது. மக்களின் பணத்தை எடுத்து தனிநபருக்கு கடனாக கொடுத்துள்ளார். இதுகுறித்து ஹிட்டன்பர்க் அறிக்கை வெளியிட்டதும், அதை மறுக்கவில்லை. மாறாக மவுனம் கடைப்பிடிக்கிறார். மணிப்பூரில் இன அழிவு ஏற்பட்டும், இதுவரை அதுகுறித்து வருத்தமோ, மன்னிப்போ கூறவில்லை. மாறாக உள்துறை அமைச்சர் அதை நியாயப்படுத்தும் வகையில் பேசுகிறார். இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே குரல் எழுப்புகிறார். தேசத்துக்கு ஏற்பட்டுள்ள பெரிய ஆபத்தை ஸ்டாலின் மட்டுமே எதிர்த்து வருகிறார்.

பிறப்பால், சாதியால் யாரும் உயர்ந்தவர்களும் அல்ல; தாழ்ந்தவர்களும் அல்ல. மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் நாட்டு மக்களைப் பிளவுப்படுத்துவோரை எதிர்க்கும் ஒரே சக்தியாக திமுக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் கட்சியின் இளைஞர் அணி செயலாளராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்றபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட டெங்கு, மலேரியா போன்ற நச்சுக் கிருமிகளுடன் சனாதனத்தை ஒப்பிட்டு, இதை ஒழிக்க வேண்டும் என தெரிவித்த கருத்தைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்தச் சிந்தனை போதும், இன்னும் நூற்றாண்டுகளைக் கடந்தும் இந்த இயக்கமும் தத்துவமும் தழைக்கும். உண்மையில், சொல்லப்போனால் சனாதனம் என்பது கொடிய எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி வைரஸைப் போன்றது. பாரபட்சமின்றி ஒழித்துக்கட்ட வேண்டும்” என்றார். இந்தக் கூட்டத்தில், அவை தலைவர் போஜன், துணை செயலாளர்கள் ஜே.ரவிகுமார், தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர்கள், நகரச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x