Published : 07 Sep 2023 05:34 PM
Last Updated : 07 Sep 2023 05:34 PM
ஈரோடு: ஈரோடு - கோபி நான்கு வழிச்சாலையில், சுங்கச்சாவடி அமைக்கும் முடிவுக்கு விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சாலையில் பயணிக்க சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதை அரசுக்கு வலியுறுத்த புதிய இயக்கமும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையின சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஈரோடு - கோபி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி இரண்டு கட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
ஈரோட்டில் இருந்து சித்தோடு வரையிலான 8.13 கிமீ தூர நான்குவழிச்சாலை பணிகள் ரூ.104.70 கோடியிலும், சித்தோடு முதல் கோபி வரையிலான 30.60 கிமீ தூரமுள்ள நான்குவழிச்சாலைப் பணிகள் ரூ.272.53 கோடியிலும் மேற்கொள்ளப்படுகின்றன. சத்தியமங்கலம் வழியாக மேட்டுப்பாளையம் வரை இந்த சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதில், சித்தோடு முதல் ஈரோடு வரையிலான நான்குவழிச்சாலைப் பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ளன.
3,500 மரங்கள் அகற்றம்: சித்தோடு முதல் கோபி வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவுற்ற நிலையில், வரும் டிசம்பர் மாதம் நிறைவு செய்யும் வகையில் சாலைப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த சாலைப்பணிகளுக்காக 3,500 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இவற்றுக்கு மாற்றாக ஒரு மரத்துக்கு 10 மரம் என்ற அடிப்படையில் மரக்கன்றுகளை நடுவதற்கு நெடுஞ்சாலைத்துறை இடங்களைத் தேர்வு செய்து வருகிறது.
ஈரோடு- கோபி இடையே அதிகரித்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்கவும், பயணத்தை எளிதாக்கவும், இந்த சாலைத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்த நான்கு வழிச்சாலையில், கோபி - கவுந்தப்பாடி இடையே பாலப்பாளையம் என்ற இடத்தில் சுங்கசாவடி அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவலுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தமிழக – கர்நாடக எல்லையில் ஈரோடு மாவட்டம் அமைந்துள்ள நிலையில், ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் விவசாய விளைபொருட்கள், சித்தோடு, கோபி, சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களும் இந்த சாலையைப் பயன்படுத்தவுள்ளன. நான்குவழிச்சாலைப் பணி நிறைவடையும் போது, சுங்கக் கட்டணம் செலுத்தியே வாகனங்கள் செல்லும் நிலை ஏற்படும், என்கின்றனர் விவசாயிகள்.
விவசாயிகளுக்கு பாதிப்பு: இதுகுறித்து ஓடத்துறை ஏரி, நீர் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வி.கே.வெங்கடாசலம் கூறியதாவது: சத்தியமங்கலம், கோபி பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்கள் விளைபொருட்களான மஞ்சள், கரும்பு, வாழை, தேங்காய், காய்கறிகள் உள்ளிட்டவற்றை ஈரோடு, சித்தோடு, கவுந்தப்பாடி கொண்டு சென்று விற்பனை செய்ய இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். சத்தி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொப்பரைத் தேங்காய் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நான்குவழிச்சாலையில், பாலப்பளையத்தில் சுங்கச்சாவடி அமைத்து, வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நான்குவழிச்சாலை அமைய இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் தங்கள் நிலங்களை இழந்துள்ளனர்.அவர்கள் தங்கள் விளை பொருட்களை விற்பனைக்குக் கொண்டு செல்ல சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற திட்டம் தவறானது. இந்த சுங்கசாவடியைத் தடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஒருவேளை சுங்கச்சாவடி அமைப்பது தவிர்க்க முடியவில்லையென்றால், விவசாயிகளுக்கு தனியாக அடையாள அட்டை கொடுத்து, அவர்களது விளைபொருட்களை சுங்கக் கட்டணம் இல்லாமல் எடுத்துச் செல்ல வழிவகை செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதிய சாலை திட்டம் அல்ல: இதனிடையே, ஈரோடு - கோபி சுங்கச்சாலை எதிர்ப்பு இயக்கம் தொடங்கப்பட்டு, பல்வேறு கட்சியினர், விவசாய அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஒத்தக்குதிரையில் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது: ஈரோடு - கோபி இடையேயான நான்கு வழிச்சாலைத் திட்டம் என்பது புதிய சாலை அமைக்கும் திட்டம் அல்ல.
புறவழிச்சாலை திட்டமும் அல்ல. நான்கு வழிச்சாலை என்றால் ஒரே சீராக இருக்க வேண்டும். ஆனால், இந்த திட்டமானது, ஏற்கெனவே இருக்கும் சாலையை ஊரகப் பகுதிகளில் சில இடங்களில் மட்டும் விரிவுபடுத்தி விட்டு, நகரப்பகுதியில் அதே அளவில் சாலை அமைக்கப்படுகிறது. எந்த இடத்திலும் அணுகுசாலை அமைக்கப்படவில்லை. அப்படியிருக்க, இந்த சாலையில் பயணிக்க எதற்காக சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
இந்த பகுதி முழுக்க, முழுக்க விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. அவர்கள் தான் இந்த சாலையை பயன்படுத்தவுள்ளனர். இந்த சுங்கக் கட்டண சாலையால் பேருந்து கட்டணத்தில் தொடங்கி அனைத்து வகையிலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, இந்த சாலையில் சுங்கச்சாவடி தேவையில்லை என்பது எங்கள் முடிவு.
ஆலோசனைக் கூட்டம்: இது தொடர்பாக நாங்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்திய பின் அதிகாரிகளைச் சந்தித்த போது, சுங்கசாவடி அமைக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இப்போது சுங்கச்சாவடி அமையும் என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். எனவே, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மீண்டும் கூட்டம் நடத்தி முடிவு எடுக்கவுள்ளோம். ஏற்கெனவே, கரூர் - கோவை சாலை விரிவுபடுத்தும் பணி நடந்தபோது, கரூர் மாவட்டம் பரமத்தி, திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் சுங்கச்சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து இரு சுங்கச்சாவடிகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அதேபோல, திருப்பூரில், அவினாசிபாளையம் அருகே அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியும் பொதுமக்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது. எனவே, விவசாயிகளின் உணர்வைப் புரிந்து கொண்டு, ஈரோடு - கோபி சாலையில் சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT