Published : 07 Sep 2023 03:48 PM
Last Updated : 07 Sep 2023 03:48 PM
மதுரை: மத்திய பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் மதுரையில் எம்பி சு.வெங்கடேசன் தலைமையில் நடந்த ரயில் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 800-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அதனையொட்டி இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை தொகுதி எம்பியுமான சு.வெங்கடேசன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் ரா.விஜயராஜன், மாவட்டச் செயலாளர் மா.கணேசன் மற்றும் 800-க்கும் மேற்பட்டோர், பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள கட்டபொம்மன் சிலையிலிருந்து ரயில் நிலையத்திற்கு பேரணியாக சென்றனர்.
அவர்களை போலீஸார் ரயில் நிலையத்துக்குள் செல்லாமல் தடுத்து நிறுத்தினர். இதில் கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போலீஸார் சுமார் 800-க்கும் மேற்பட்டோரை கைது செய்து வேனில் ஏற்றினர்.
அதேபோல், திருப்பரங்குன்றத்தில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக் கண்ணன் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் ராம கிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் விஜயா, திருப்பரங்குன்றம் தாலுகா செயலாளர் ஜெயக்குமார், மாவட்டக்குழு இளங்கோவன் உள்பட 23 பெண்கள் உள்பட100 பேர் கலந்து கொண்டனர். அதேபோல், யா.ஒத்தக்கடை தபால் நிலையம், கூடல்நகர் இந்தியன் வங்கி, செல்லம்பட்டி, டி.கல்லுப்பட்டி தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.பாலா, எஸ்.கே.பொன்னுத் தாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT