Published : 07 Sep 2023 01:54 PM
Last Updated : 07 Sep 2023 01:54 PM
விருதுநகர்: விருதுநகர் அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் சாணத்தை கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் அருகே சிவஞானபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது சின்ன மூப்பன்பட்டி. இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சின்ன மூப்பன்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 222 பேர் பயின்று வருகின்றனர். இவர்களில் 123 மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் காலை உணவும், 150 மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவும் பள்ளி வளாகத்திலேயே சமைத்து வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் கூடத்தை ஒட்டி வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் கடந்த செவ்வாய்க் கிழமை சாணத்தை கொட்டிச் சென்றுள்ளனர். அதிகாலையில் சமையல் கூடத்திற்கு சென்ற பணியாளர்கள் தண்ணீர் பிடித்த போது சாணம் கலந்து வந்தது தெரிய வந்தது. அதையடுத்து தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து மீண்டும் தண்ணீர் ஏற்றி பின்னர் பயன்படுத்தினர்.
இதேபோன்று இன்று காலையிலும் பள்ளி வளாகத்தில் உள்ள அதே குடிநீர் தொட்டியில் சாணம் கொட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து நடக்கும் இச்சம்பவத்தால் பள்ளிக்கு சமையல் வேலைக்கு வரும் ஊழியர்கள் அச்சமடைந்தனர். இது குறித்து பள்ளியின் நிர்வாகத்திற்கும் கிராமத்தினரிடமும் தெரிவிக்கப்பட்டது. பள்ளி குடிநீர் தொட்டியில் சாணம் கொட்டப்பட்ட சம்பவம் கிராமத்தினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பம் குறித்து விருதுநகர் மேற்கு போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், ஊராட்சி நிர்வாகம் சார்பில், சாணம் கொட்டப்பட்ட குடிநீர் தொட்டி அவ்விடத்தில் இருந்து உடனடியாக அகற்றப்பட்டது. அதோடு சமையல் கூடத்தின் உள்பகுதியில் புதிய தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டது.
மேலும் இந்த தண்ணீர் தொட்டியை சுற்றி இரும்பினால் ஆன கிரில் கேட் அமைக்கப்பட உள்ளதாகவும் சாணத்தை கொட்டிய நபர்கள் யார் என்பதை கண்டறிய தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT