Published : 07 Sep 2023 06:33 AM
Last Updated : 07 Sep 2023 06:33 AM
சென்னை: பல்கலை. துணைவேந்தர் நியமனத்துக்கான தேடல் குழுவில் தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி யுஜிசி உறுப்பினர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கூடுதலாக சேர்த்துள்ள விவகாரம் மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.
தமிழகத்தில் மாநில அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான புதிய துணைவேந்தர் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) பிரதிநிதியையும் 4-வது நபராக சேர்க்க வேண்டுமென தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவிதரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப் பட்டது. ஆனால், இதை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்டது.
உயர்கல்வி துறை விளக்கம்: மாநில பல்கலை.க்கு துணைவேந்தரை நியமிக்க யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. யுஜிசி சார்பில் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை என்று ஆளுநர் மாளிகைக்கு உயர்கல்வித் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு இருதரப்புக்கு இடையேயான மோதலில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலை.யில் புதிய துணைவேந்தர் நியமனத்துக்கான தேடல் குழு அமைப்பதில் தொடர் இழுபறி நிலவியது.
இந்நிலையில் தமிழக அரசின் கருத்தை ஏற்காமல் பல்கலை.யின்புதிய துணைவேந்தர் நியமனத்துக்கான தேடல் குழுவில் யுஜிசி உறுப்பினரையும் கூடுதலாக சேர்த்து ஆளுநர் ரவி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவை பாரதியார் பல்கலை. துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான தேடல் குழுவில் அரசுசார்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டபுள்யூ.சி.டேவிதர் (ஒருங்கிணைப்பாளர்), பல்கலைக்கழக சிண்டிகேட் சார்பில் சென்னை பல்கலை. முன்னாள் துணைவேந்தர் பி.துரைசாமி, செனட் சார்பில் பாரதியார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் ஜி.திருவாசகம், யுஜிசி சார்பில் பெங்களூரு பல்கலை. முன்னாள் துணைவேந்தர் பி.திம்மேகவுடா நியமிக்கப்படுகின்றனர்.
இதேபோல், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடல்குழுவில், ஆளுநர் சார்பில் யுஜிசிஉறுப்பினர் சுஷ்மா யாதவ் (ஒருங்கிணைப்பாளர்), அரசு சார்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீன், பல்கலைக்கழக சிண்டிகேட்சார்பில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் டி.பத்மநாபன், யுஜிசி சார்பில் தெற்கு பிஹார் மத்திய பல்கலை. முன்னாள் துணைவேந்தர் எச்.சி.எஸ்.ரத்தூர் ஆகியோர் நியமனம் செய்யப்படுகின்றனர்.
சென்னை பல்கலை. துணைவேந்தருக்கான தேடல் குழுவில் ஆளுநர் சார்பில் கர்நாடகா மத்தியபல்கலை. துணைவேந்தர் பட்டுசத்யநாராயணா (ஒருங்கிணைப்பா ளர்), பல்கலைக்கழக சிண்டிகேட் சார்பில் மாநில திட்டக்குழு உறுப்பினர் கே.தீனாபண்டு, செனட் சார்பில் பாரதிதாசன் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் பி.ஜெகதீசன், யுஜிசி சார்பில் தெற்கு பிஹார் மத்திய பல்கலை. முன்னாள் துணைவேந்தர் எச்.சி.எஸ்.ரத்தூர் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
இந்த தேடல் குழு, துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களில் ஒவ்வொரு பல்கலை.க்கும் தகுதியான 3 பேரை ஆளுநரிடம் பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கமாக புதிய துணைவேந்தர் நியமனத்துக்கான தேடல் குழுஅமைக்கப்பட்டதும், அதன் அறிவிப்பு ஆளுநர் ஒப்புதலுடன் அரசிதழில் வெளியிடப்படும். ஆனால், இந்த முறை ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியாகியுள்ள தன்னிச்சையான அறிவிப்பானது உயர்கல்வித் துறை வட்டாரத்தில் பெரும் பேசுப் பொருளாகியுள்ளது.
ஏற்கெனவே தமிழக முதல்வர், ஆளுநர் இடையே கருத்து வேறுபாடு நிலவிவரும் சூழலில் இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT