Published : 15 Dec 2017 12:43 PM
Last Updated : 15 Dec 2017 12:43 PM
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று (வெள்ளிக்கிழமை) கடலூரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதையொட்டி கடலூரின் எந்த இடங்களுக்குச் சென்று பார்வையிடுவது என்பதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒரு பட்டியலும் கடலூர் மாவட்ட திட்ட அலுவலர் ஒரு பட்டியலுமாக வைத்திருந்ததால், குளறுபடி ஏற்பட்டது.
தமிழக ஆளுனர் சமீபத்தில் கோயம்புத்தூரில் நேரடியாக பல பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தினார். மேலும் கோவை மாவட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டமும் நடத்தினார். இது தமிழக அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
பாஜகவின் ஆளுமையை பலப்படுத்தும் விதமாக, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவதுபோல், வட மாநிலங்களில் உள்ள ஆளுநர்களைக் கொண்டு செயல்படுவது போல், தமிழகத்திலும் பாஜக அரசு, ஆளுநர்களைக் கொண்டு மறைமுகமாக ஆட்சி நடத்த முனைகிறது என அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரடியாகவே குற்றம்சாட்டினர். ஆனால் ஆளுங்கட்சியிடம் இருந்து இதுவரை இதுதொடர்பான எதிர்ப்பு வரவில்லை.
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, திமுகவினர், ஆய்வுக்கு வரும் கவர்னருக்கு கடலூர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்பாட்டம் செய்து எங்கள் எதிர்ப்பைக் காட்டுவோம் என அறிவித்தனர்.
இன்று 15ம் தேதி வெள்ளிக்கிழமை காலையில், ஆளுநர் புரோஹித், கடலூர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அவருடன் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு வடனேரே , திட்ட அலுவலர் ஆனந்த்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் வந்தார்கள்.
வண்டிப்பாளையம், அம்பேத்கர் நகர் முதலான பகுதிகளுக்கு ஆளுநர் சென்றார். அம்பேத்நகரின் தெருக்களுக்குள் செல்லும் போது, வீட்டு வாசலில் உள்ள தடுப்புகளிட்ட குளியலறையில் இருந்த பெண்கள் பதறிப்போனார்கள். இதையடுத்து சூழ்நிலையைப் புரிந்து கொண்ட அதிகாரிகள், அங்கிருந்து நகர்ந்தார்கள்.
வண்டிப்பாளையம் பகுதிக்குச் சென்ற ஆளுநர், அங்கே தூய்மை இந்தியாத் திட்டத்தின்படி கட்டப்பட்டு உள்ள கழிவறை குறித்த விவரங்களையும் எண்ணிக்கைகளையும் கேட்டறிந்தார். அங்கிருந்த பொதுமக்களை அழைத்து, தூய்மை இந்தியா திட்டத்தின் பயன்கள் குறித்து அவர்களிடம் கேள்விகள் கேட்டு, பதிலைப் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக, எந்தந்தப் பகுதிகளுக்கு ஆளுநரை அழைத்துச் செல்வது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஒரு பட்டியலும் திட்ட அலுவர் வேறுவிதமான பகுதிகளைக் கொண்ட பட்டியலும் வைத்திருந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆளுநரின் ‘கான்வாய்’ குழப்பத்தில் இருந்ததாகச் சொல்கிறார்கள்.
திமுக.,வினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
கடலூரில் ஆய்வு மேற்கொள்ள ஆளுநர் வந்தால், அவருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என தி.மு.க.வினர் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று ஆளுநர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், மஞ்சக்குப்பம் மெயின் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தின் வாசலில் இருந்துகொண்டு, கருப்புக் கொடி காட்டியபடி கோஷங்கள் எழுப்பினார்கள் திமுக.,வினர். இதை அறிந்த மாவட்ட நிர்வாகம், ஆளுநரை வேறு வழியாக அழைத்துச் சென்றது. ஆனால் மஞ்சக்குப்பம் மெயின் சாலைதான் கடலூரின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வதற்கான முக்கியமான வழி என்பதால், ஊரைச் சுற்றிச் சுற்றி வரும் நிலை இருந்தது. செம்மண்டலம் பாலம் வழியே சுற்றுப்பாதையில் அழைத்துச் சென்றனர். பிறகு திருவஹிந்திரபுரம் தேரடி வீதியில் சிறிது நேரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
உடனே ஆட்சித்தலைவரை அழைத்து, விவரம் கேட்டார் ஆளுநர். தி.மு.க.வினர் கருப்புக் கொடி காட்டுகிற விஷயத்தைச் சொல்லி, அதனால்தான் சுற்றிக் கொண்டு வருவதாக விவரித்தார் ஆட்சித்தலைவர். உடனே ஆளுநர், அந்தப் பாதையிலேயே செல்லலாம். பரவாயில்லை என்று சொன்னார். அதன்படி, மஞ்சக்குப்பம் பகுதியில் தி.மு.க. அலுவலகம் உள்ள சாலை வழியே ஆளுநர் மற்றும் அதிகாரிகள் சென்றனர். அப்போது தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்டியபடி கோஷங்கள் எழுப்பினார்கள். ஆனால் எவரையும் போலீஸார் கைது செய்யவில்லை.
பொதுமக்கள் சாலை மறியல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT