Published : 17 Dec 2017 03:14 PM
Last Updated : 17 Dec 2017 03:14 PM

சுறுசுறு வேகத்தில் பழங்குடியினர் ஐடிஐ கட்டிடம்: மகிழ்ச்சியில் ஆனைகட்டி கிராமங்கள்

'வருமோ, வராதோ; இடம் மாறுமோ?' என்று பல ஆண்டுகளாக இழுபறியாக இருந்த பழங்குடியினர் அரசினர் பயிற்சி நிலையக் கட்டிடம் (ஐடிஐ) சுறுசுறு வேகத்தில் உருவாகிக் கொண்டிப்பதால் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் ஆனைகட்டியை சுற்றியுள்ள கிராம மக்கள்.

கோவை மாவட்டத்தில் வால்பாறை, ஆளியாறு, பொள்ளாச்சி, ஆனைகட்டி, பெரிய நாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் மலையோர கிராமங்களில் பழங்குடியின மக்கள் மிகுதியாக வசித்து வருகின்றனர். பெரும்பாலும் கல்வி மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியிருக்கும் இவர்கள், சமீப காலமாகத்தான் கல்வி கற்க வெளியில் வருகின்றனர். அதிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பட்டப்படிப்புக்கும், அரசு வேலைகளுக்கும் செல்கின்றனர்.

பெரும்பான்மையோர் பள்ளிப்படிப்பைக் கூட பாதியில் நிறுத்தி விடக்கூடியவர்களாக உள்ளார்கள். பிளஸ் 2 வரை படித்து முடிப்பவர்கள் கூட மிகக் குறைவாகவே உள்ளார்கள். எனவே பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கும், இடைநிற்றல் மாணவர்களுக்கும் ஏதுவாக பழங்குடியினருக்கென ஐடிஐ ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம் பல்வேறு தொழில்களுக்கும் பழங்குடி மக்கள் செல்ல வேண்டும் என வலியுறுத்தி வந்தனர் இச்சமூக பெருமக்கள். அந்த வகையில் கோவை ஆனைகட்டியில் புதிதாக பழங்குடியினர் 'ஐடிஐ'யை 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தியது தமிழக அரசு.

அதற்கென கட்டிடம் இல்லாததால் கோவை துடியலூரில் ஏற்கெனவே இயங்கி வந்த ஐடிஐ கட்டிடம் ஒன்றிலேயே இதுவும் நடந்து வந்தது. இதே நேரத்தில் ஆனைகட்டியில் சுமார் ரூ.7 கோடி மதிப்பில் கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கப்பட, அதில் கட்டிடம் கட்ட முடியாத வண்ணம் பல்வேறு சர்ச்சைகள் உருண்டன. அதனால் ஐடிஐ அங்கே வருமோ, வராதோ, வேறு இடத்திற்குச் செல்லுமோ என கவலைப்பட்டனர் உள்ளூர்வாசிகள். ஆனைகட்டியைப் பொறுத்தவரை ஜம்புகண்டி, பனப்பள்ளி, தூவைப்பதி, தூமனூர், சேம்புக்கரை, மாங்கரை, ஆலமரமேடு என 50க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளது. இவை தவிர பில்லூர், காரமடை, வெள்ளியங்காடு ,மேட்டுப்பாளையத்தை ஒட்டியும் ஏராளமான பழங்குடியினர் கிராமங்கள் உள்ளன.

இங்கே ஐடிஐ அமைந்தால் ஏராளமான பழங்குடியின குழந்தைகள் அரசினர் பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. நீண்ட கால அந்த எதிர்பார்ப்பு இப்போது பூர்த்தியாகும் வண்ணம் அந்த இடத்தில் தற்போது ஐடிஐ கட்டிடத்துடன் மாணவர் தங்கும் விடுதியும், ஆசிரியர் விடுதியும் கட்டப்பட்டு வருகிறது. ரூ.1 கோடி மதிப்பில் விடுதிகள் கட்டும் பணி தொடங்கி ஆறு மாதங்களான நிலையில் அவை 70 சதவீதம் முடிந்துவிட்டது. கடந்த மாதம் ஐடிஐ கட்டிடம் கட்டும் பணி தொடங்கி, அஸ்திவாரப்பணிகள் முடிந்துள்ளன. இதில் ஐடிஐ கட்டிடம் மட்டும் 1404.6 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. ஆறு மாதங்களில் பணி நிறைவுறும் என ஒப்பந்ததாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஐடிஐ கட்டிடம் உருவாவது குறித்து உள்ளூர் முன்னாள் கவுன்சிலர் சம்பத் பேசுகையில், ''4 ஆண்டுகளாக துடியலூரில் நடந்து வரும் ஐடிஐயில் சொற்ப மாணவர்களே படிக்கின்றனர். பள்ளியில் 8-ம் வகுப்புக்கு மேல் படித்தவர்கள் கணக்குக்கும், அங்கே படிப்பவர்கள் எண்ணிக்கைக்கும் மிகுந்த இடைவெளி உள்ளது. அதுவே இங்கே புதிய கட்டிடம் அமையுமானால் அதை விடப் பத்து மடங்கு பெருகும். வருடத்திற்கு 100 பேர் முதல் 200 பேர் வரை சேர்க்கை நடக்கும். ஆனைகட்டியை சுற்றியுள்ள பழங்குடியின கிராமங்களின் மக்கள் மட்டுமல்லாது, பில்லூர், காரமடை, மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்தெல்லாம் மாணவர்கள் வருவதற்கு வாய்ப்பாக அமையும். அரசு வேலையும் மிகுதியாக இந்தப் பிள்ளைகளுக்கு கிடைக்கும்!'' என தெரிவித்தார்.

இந்த ஐடிஐ இங்கே வருவதற்கு பெருமுயற்சி எடுத்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி 'தி இந்து'விடம் பேசும்போது, ''தொகுதி எம்எல்ஏவாக போன முறை தேர்ந்தெடுக்கப்பட்ட போதே நான் வைத்த முதல் கோரிக்கைகளில் இதுவும் ஒன்று. முதலில் ஹாஸ்டல் கட்டிடங்கள், ஐடிஐ கட்டிடம், ஆசிரியர்கள் நியமனம் என பலவும் சேர்த்து சுமார் ரூ.7 கோடி திட்டத்தில் இது அறிவிக்கப்பட்டது. அது தற்போது பல வேலைகளாக பிரித்து செய்யப்படுகிறது. அதில் ஐடிஐ கட்டிடம் மட்டுமே ரூ.2 கோடி மதிப்பீடு. மற்றபடி இங்கே பழங்குடியின மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 50 ஆண்டு கோரிக்கையான தூமனூர், சேம்புக்கரைக்கு இப்போதுதான் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. அங்கே 50 பசுமை வீடுகள் கட்டப்படுகிறது. ஆனைகட்டியில் உள்ள உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கணுவாய் மலையோரம் குடியிருந்தவர்கள் 400 பேருக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஐடிஐ கட்டிடம் கட்டி செயல்படத் தொடங்கும்போது மலைமக்களின் முன்னேற்றம் என்பது இன்னொரு நிலையில் உயரும்!'' என குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x