Published : 06 Sep 2023 06:58 PM
Last Updated : 06 Sep 2023 06:58 PM
சென்னை: "உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், செந்தில் பாலாஜியை அமைச்சராகவே வைத்திருக்க வேண்டும் என்று முதல்வர் விரும்புவதில் உள்ள மர்மம் என்ன?" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்த வழக்கில், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை, இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. பொதுமக்களிடம் பண மோசடி செய்த ஒருவரை, அமைச்சராகத் தொடரச் செய்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஏன் வந்தது என்பது புரியவில்லை. பொதுமக்கள் உட்பட அனைவரும் கேள்வி எழுப்பியும், முதல்வர் அதற்கு பதிலளிக்காமலேயே இருந்து வந்தார். இந்த நிலையில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், நேற்று, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இத்தனை நாட்களாக, பொதுமக்களும், தமிழக பாஜக உள்ளிட்ட கட்சிகளும் எழுப்பிய கேள்விகளையே, முதல்வரை நோக்கி நீதிமன்றமும் வைத்துள்ளது. சிறையில் இருப்பவர் எப்படி அமைச்சர் பதவிக்கான பணிகளை மேற்கொள்ள முடியும்? எந்தப் பணிகளும் ஒதுக்கப்படவில்லை என்றால், எதற்காக அவரை அமைச்சராக வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியதோடு, ஊழல் குற்றச்சாட்டு இருப்பவர்களை அமைச்சர் பதவிகளில் நியமிக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், அமைச்சருக்கான பணிகளை ஒருவருக்கு ஒதுக்க முடியவில்லை என்றால், அவரை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது அரசியலமைப்புச் சட்ட அடிப்படையில் இல்லாத, தார்மிக நெறிமுறைகளுக்கும் நல்லாட்சிக்கும் எதிரானது என்று உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
செந்தில் பாலாஜி மீது ஊழல் புகார்களை அடுக்கிய திமுகவே, இன்று அவரைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் சென்றதுதான் விந்தையிலும் விந்தை. சோதனைக்கு வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய அன்றே அமைச்சர் பதவிக்கான தார்மிக உரிமையை அவர் இழந்து விட்டார். அதன் பின்னர், அமலாக்கத் துறை விசாரணையின் போதும்கூட, பண மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை அமைச்சரவையில் வைத்திருப்பது தவறு என்று தமிழக பாஜக தொடர்ந்து முதல்வரை வலியுறுத்தி வந்தது. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றியோ, வாக்களித்த மக்கள் குறித்தோ எந்தக் கவலையும் இல்லாத முதல்வர் ஸ்டாலின், தனது சாராய அமைச்சரை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்ற முயற்சியில், அரசு இயந்திரத்தையே தவறான வழியில் செலுத்தினார்.
விளைவு, இன்று உயர்நீதிமன்றமே, தமிழக அரசின் தலையில் கொட்டு வைத்திருக்கிறது. ஆனாலும் இதுவரை, முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார். அனைவருக்கும் உள்ள ஒரே கேள்வி, உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், செந்தில் பாலாஜியை அமைச்சராகவே வைத்திருக்க வேண்டும் என்று முதல்வர் விரும்புவதில் உள்ள மர்மம் என்ன என்பதுதான். அவரது அமைச்சரவையில் உள்ள மற்ற அமைச்சர்களுக்கு இதுபோன்ற பிரச்சினை வந்தால், முதல்வர் ஸ்டாலின் இதே போல அவர்களையும் காப்பாற்ற முயற்சிப்பாரா என்பது கேள்விக்குறியே. வரிசையில் மேலும் பல திமுக அமைச்சர்கள் இருப்பதால், முதல்வர் தற்போது என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை தமிழக மக்கள் கூர்ந்து கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள், என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT