Published : 06 Sep 2023 05:41 PM
Last Updated : 06 Sep 2023 05:41 PM

இந்த வருஷ தீபாவளிக்காவது பழைய போனஸ் கிடைக்குமா? - டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்பார்ப்பு

திருச்சி: கரோனா காலத்துக்கு முன்பு வழங்கப்பட்டு வந்த 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகையை வரும் தீபாவளி பண்டிகைக்கு மீண்டும் வழங்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகம் முழுவதும் 5,200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவியாளர் ஆகிய நிலைகளில் 25 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு அரசு ஆண்டுதோறும் தீபாவளி போனஸாக 20 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.16,400 என அறிவித்து வழங்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, கரோனா பெருந்தொற்று பரவியதால் கடந்த 2020-ம் ஆண்டு முதல் தீபாவளி போனஸை பாதியாக, அதாவது ரூ.8,200 ஆக அரசு குறைத்தது. தற்போது கரோனா பெருந்தொற்று குறைந்து கடந்த 2 ஆண்டுகளாக கடைகளில் விற்பனை சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது.

எனவே ஊதியத்தில் 20 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.16,400 போனஸாக வழங்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். டாஸ்மாக் பணியாளர்களில் முக்கியமான 55 கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் உள்ளிட்ட 19 சங்கங்களுடன் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, உள்துறை செயலாளர் அமுதா ஆகியோர் கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் 39 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. எஞ்சிய கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளன. இதற்கிடையே, தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமிக்கு டாஸ்மாக் சங்கங்கள் அண்மையில் அனுப்பிய கோரிக்கை மனுவில், ‘‘டாஸ்மாக் பணியாளர்களுக்கு கரோனா காலத்துக்கு முன்பு வழங்கப்பட்டு வந்த 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகையை வரும் தீபாவளி பண்டிகைக்கு மீண்டும் வழங்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் பொது நலச்சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறுகையில், ‘‘நாங்கள் முன்வைத்த 55 கோரிக்கைகளில் 39 கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு தந்துள்ளது. அதேபோல கரோனாகாலத்தில் குறைக்கப்பட்ட போனஸ் மற்றும் கருணைத் தொகையை வரும் தீபாவளி பண்டிகைக்கு வழங்கும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x